வடக்கு மாகாணத்திலுள்ள மாணவர்களின் நலன்களைக் கருத்தில்கொண்டு தயாரிக்கப்பட்ட, 2026ஆம் ஆண்டுக்கான சேவையின் தேவை கருதிய ஆசிரியர் இடமாற்றப்பட்டியல் வெளியாகியுள்ள நிலையில் அதில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கருதும் எந்தவொரு ஆசிரியரும் மேன்முறையீடு மேற்கொள்ள முடியும் எனவும், மேன்முறையீடு எதிர்வரும் 22ஆம் திகதியுடன் நிறைவடைய இருந்த நிலையில், ஆசிரியர்களின் நலன்கருதி எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார்.
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர், வடக்கு மாகாண மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர்களுடன் விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது.
அதன் போது, வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் தலைமையிலான மேன்முறையீட்டுக் குழுவால் ஆசிரியர்களால் சமர்ப்பிக்கப்படும் ஒவ்வொரு மேன்முறையீடும் உரிய முறையில் தனித்தனியாக ஆராயப்பட்டு தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் எனவும் ஆளுநரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மாகாணக் கல்விப் பணிப்பாளர் தலைமையிலான மேன்முறையீடுக் குழுவால் உரிய நிவாரணம் தமக்கு கிடைக்கப்பெறவில்லை எனக் கருதுவும் எந்தவொரு ஆசிரியரும் முறையே மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவுக்கு, ஆளுநருக்கு மேன்முறையீடுகளைச் சமர்ப்பிக்க முடியும் என ஆளுநர் தெரிவித்தார்.
அதேவேளை ஆசிரியர் இடமாற்ற கொள்கையை சரியான முறையில் நடைமுறைப்படுத்துமாறும், கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கஷ்டப் பிரதேசம் மற்றும் அதி கஷ்டபிரதேசங்களில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கான இடம் மாற்றங்கள் சரியான முறையில் வகுக்கப்படவில்லை என கூறி வடமாகாண ஆசிரியர்கள் கடந்த திங்கட்கிழமை முதல் வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






No comments