இன்றைய நாட்டுச் சூழல் அமைப்பில் வாழும் மக்களுக்கு எல்லா வசதிகளும் கிடைக்கப் பெற்றிருந்தாலும், அவர்களைச் சூழ்ந்திருக்கும் துன்பத்தை போக்குவதற்கும் அதிலிருந்து விடுதலை பெறுவதற்கும் தியானப்பயிற்சிகள் மற்றும் மன வளக்கலை யோகாப் பயிற்சிகள் தேவையாக இருக்கின்றன என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அறிவுத்திருக்கோயிலின் ஒன்பதாம் அகவை நாளை முன்னிட்டு அங்கு நேற்று புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய ஆளுநர் மேலும் கூறியதாவது,
பொதுவாக ஒவ்வொரு மனிதனும் விரும்புவது ஆரோக்கியத்தையும், அமைதியையும் சந்தோசத்தையும்தான். ஆரோக்கியம் என்பதை நிச்சயம் உருவாக்கிக் கொள்ள முடியும். தியானம் என்ற தன்மை எமக்குள் வந்துவிட்டால் அமைதியும் சந்தோசமும் இயல்பானதாகிவிடும்.
தியானம் என்பது செயல் அல்ல. அது ஒரு நிலை வாழ்க்கையே. தியான நிலையில் இருக்க வேண்டும் என்பது தான் நம் நோக்கம். எதைச்செய்தாலும் தியான நிலையில் செய்வதைப்பற்றியே பேசுகின்றோம். இத் தன்மையையே ஒவ்வொருவரும் வாழ்வில் கொண்டுவர விரும்புகின்றோம். அப்படி நடந்தால், ஆரோக்கியமாக இருப்பது, அமைதியாக ஆனந்தமாய் இருப்பது என்பதெல்லாம் முயற்சியின்றி நடக்கும்.
ஒருவனின் மனம் தூய்மையாக இல்லையெனில் பணமோ, பலமோ அவனுக்கு பலன் தராது என அறிஞர் அரிஸ்டாட்டில் கூறியுள்ளதனை இவ்வேளை உங்களுக்கு ஞாபகமூட்ட விரும்புகின்றேன்.
தியானத்தை பொறுத்தவரையில் மனச் சுத்தமே முதன்மையானது அமைதியான மனம், நல்ல கவனிப்புத்திறன், கருத்துக்களில் தெளிவு, தகவல் தொடர்புகளில் மேம்பாடு, திறன்கள் மற்றும் திறமைகள் மலர்தல், அசைக்கமுடியாத உள்மனத்திடம், ஆற்றுப்படுத்தல், உள்மன ஆற்றுதலுடன் இணைதல், இளைப்பாறுதல், புத்துணர்வு பெறுதல் என்பவை ஒழுங்கான சீரான தியானத்தின் இயற்கை விளைவுகளாகும்.
கண் பார்ப்பதைவிட மனம் அறிவதை விட வேகமாக அழுத்தம் ஏற்படும் இவ் உலகில் ஆனந்தம் மற்றும் அமைதியைப் பெற தியானத்தின் சக்தியைத் தட்டிப்பெற வேண்டும் என மேலும் தெரிவித்தார்
இந்த நிகழ்வில், சிறப்பு விருந்தினராக கலைமாமணி சொல்வேந்தர் சுகி.சிவம் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






No comments