நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொள்வதில் இடர்பாடுகள் உள்ளதாக மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கிராமிய வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தில் தீவுப்பகுதியில் வீதி அபிவிருத்தியை நடைமுறைப்படுத்துவதில் எதிர்நோக்கும் இடர்பாடுகள் குறித்த கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நேற்றைய தினம் சனிக்கிழமை யாழ் . மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில், யாழ்ப்பாண மாவட்டத்தில் போக்குவரத்து, பெருந்தெருக்கள் துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வீதி அபிவிருத்தி வேலைகளின் உடைய முன்னேற்றம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
அதன் போது, வேலணை,ஊர்காவற்றுறை , காரைநகர் மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து, பெருந்தெருக்கள் துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் 250 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்படவுள்ள வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை விரைவாக முன்னெடுப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
கிடைக்கப்பெற்ற விசேட நிதியானது காலதாமதமாக கிடைத்தமை, கடல் கடந்த போக்குவரத்து மற்றும் இனிவரப்போகும் பருவகால மழை காரணமாக வேலைத்திட்டங்களை விரைவாக செயற்படுத்துவதில் உள்ள இடர்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
அதன்போது, வேலணை,ஊர்காவற்றுறை மற்றும் காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை விரைவாக முன்னெடுக்க முடியுமெனவும் ஆனால் நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வேலைத்திட்டங்களை மேற்க்கொள்வதில் இடர்பாடுகள் உள்ளதாகவும் அதனடிப்படையில் நெடுந்தீவில் முழுமையாக 3 வீதிகளின் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும்மென தெரிவிக்கப்பட்டது.
நெடுந்தீவில் உள்ளே வேறு வீதிகளை புனரைமைப்பது தொடர்பில் ஆராய்ந்து முடிவு எட்டப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் , மாவட்ட செயலர் ம. பிரதீபன், பிரதேச சபை தவிசாளர்கள் , உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ,வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர்,மேலதிக அரசாங்க அதிபர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம கணக்காளர், வேலணை ,காரைநகர் ,ஊர்காவற்றுறை மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலாளர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபையில் பிரதம பொறியியலாளர், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் நிறைவேற்றுப் பொறியியலாளர், பெருந்தெருக்கள் துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் நிரோசன் ரட்ணாயக்க அவர்களது பிரத்தியோக இணைப்பாளர், மாவட்ட ஒருங்கிணைப்புகுழு அலுவலக இணைப்பாளர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



.jpg)


No comments