இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த எங்களால் அவர்களை கைது செய்ய மட்டுமே முடியும். அவர்களை கைது செய்து, மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கடற்தொழில் நீரியல் வளத்துறையினரிடம் கையளிப்பதுடன் எங்கள் கடமை முடிந்து விடும் என வடக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்படை முகாமில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்துவது எமக்கு சவாலானது. கடற்படை படகுகளுக்கான எரிபொருள் அதிகளவில் தேவைப்படும். அதனால் எரிபொருள் சிக்கல்களை எதிர்கொள்கின்றோம்
கடற்படையினர் ஒரு டோரா படகில் போனால் , இந்திய மீனவர்கள் 50 - 100 படகுகளில் பெருமெடுப்பில் வருவார்கள். கடற்படையின் படகினை கண்டதும் இந்திய எல்லைக்குள் ஓடி விடுவாங்க. எங்களால் துரத்தி பிடிக்க முடிந்தளவு படகையும் மீனவர்களையும் கைது செய்கிறோம்.
எங்களால் மீனவர்களை கைது செய்ய மட்டும் தான் முடியும். கைது செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்த கடற்தொழில் நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைப்போம். அதனை மட்டுமே கடற்படையால் செய்ய முடியும்.
இந்திய மீனவர்கள் விடயத்தில் அரசாங்கம் எமக்கு எந்த அழுத்தமும் தருவதில்லை.
இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் போன்றே , உள்ளூர் மீனவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்த வேண்டிய நடவடிக்கைகளை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
உள்ளூர் மீனவர்களின் சட்டவிரோத செயல்களை தனியே கடற்படை மாத்திரம் தடுக்க முடியாது. அதற்கு மக்களின் சமூகத்தின் ஒத்துழைப்பு கட்டாயம் தேவை.
சமூகத்தில் இருந்து தகவல்கள் கிடைக்க வேண்டும். அவ்வாறு தகவல்கள் கிடைத்தால் கடற்படையினர் நிச்சயமாக நடவடிக்கை எடுப்பார்கள்.
அதேபோன்றே இலங்கைக்குள் போதைப்பொருள் வருவதனை கடற்படையினரால் மட்டும் கட்டுப்படுத்த முடியாது. அதற்கு முப்படைகளின் ஒத்துழைப்பும் இருக்க வேண்டும்.
கடற்படையினர் கடலில் சுற்றுக்காவல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு ,முடிந்தளவுக்கு கடல் வழியாக போதைப்பொருள் இலங்கைக்குள் கொண்டுவருவதனை தடுக்க முடிகிறது. முழுமையாக கட்டுப்படுத்த விமான படை மற்றும் இராணுவத்தின் ஒத்துழைப்பும் கடற்படைக்கு தேவை.
இலங்கை கடற்படை தன்னிச்சையாக எந்த ஒரு முடிவையும் முடிவெடுக்க முடியாது பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமையவே நடவடிக்கை எடுக்க முடியும். பாதுகாப்பு அமைச்சு என்பதே அரசாங்கம்
ஆகவே எமக்கான ஒத்துழைப்புக்கள் சமூக மட்டத்தில் இருந்தும் , இராணுவம் , விமானப்படை மற்றும் பொலிஸார் என சகல வழிகளிலும் கிடைக்குமாயின் சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்த முடியும் என மேலும் தெரிவித்தார்.
No comments