Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வடமாகாணத்தில் இருந்து முதலீட்டாளர்கள் திரும்பி செல்கின்றனர்.


வடமாகாணத்தில் முதலீட்டாளர்கள் அனுமதிகளைப் பெற்றுக் கொள்வதில் உள்ள இழுபறிகள் காரணமாக திரும்பிச் செல்கின்றனர். எனவே உள்ளூராட்சி மன்றங்கள் தங்கள் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் முதலீட்டாளர்களை ஈர்த்துக்கொள்ளவேண்டும் என வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார். 


வடக்கு மாகாணத்திலுள்ள மாநகர முதல்வர்கள், நகர சபைகளின் தவிசாளர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள் ஆகியோருக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  

அக்கலந்துரையிடலின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், 

பிரதேச சபைகளில் பணியாற்றுபவர்களின் எண்ணங்களிலும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். மக்கள் பல்வேறு அனுமதிகள் தாமதமடைவதாக சுட்டிக்காட்டுகின்றார்கள். மக்களுக்கான சேவைகளை துரிதமாக செய்து கொடுக்க வேண்டும். தவிசாளர்களும், செயலாளர்களும் ஒன்றுபட்டுச் செயற்படுவதன் ஊடாகவே அபிவிருத்தி சாத்தியமாகும்.

திண்மக் கழிவு அகற்றல் உள்ளூராட்சி மன்றங்களுக்கு சவாலாகி வருகின்றன. திண்மக் கழிகளை தரம்பிரிக்கும் நிலையங்களை ஒழுங்காக செயற்படுத்தாதன் காரணமாக மக்கள் அதற்கு எதிர்ப்பு வெளியிடுகின்றார்கள். எனவே அது தொடர்பில் சபைகள் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.

போக்குவரத்து நெரிசல்களைக் கட்டுப்படுத்துவதற்காக ஒருவழிப் பாதைகளை அறிமுகப்படுத்தல், கனரக வாகனங்களின் பாவனைக்கு நேரக்கட்டுப்பாடுகளை விதித்தல் ஆகியனவற்றை செயற்படுத்தவேண்டும். இது தொடர்பில் பொலிஸாரின் ஒத்துழைப்பு உள்ளூராட்சி மன்றங்களுக்கு பெற்றுத்தரப்படும்.

எதிர்வரும் மழை காலத்துக்கு முன்னர் சபைகளுக்கு உட்பட்ட அனைத்து வாய்க்கால்கள், மதகுகளை துப்புரவு செய்யுங்கள். சில சபைகள் ஏற்கனவே எங்களால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைவான நடவடிக்கையை எடுத்துள்ளன. அதை ஏனைய சபைகளும் செய்ய வேண்டும். அதேநேரம், வெள்ளம் வடிந்தோடுவதற்கு தடையாக அமைந்துள்ள சட்டமுரணான கட்டுமானங்களை உடனடியாக அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கட்டங்களுக்கான குடிபுகு சான்றிதழைப் பெற்றுக் கொள்வதை கட்டாயமாக்குவதுடன் அவ்வாறு பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும் உள்ளூராட்சி மன்றங்கள் ஆரம்பிக்கவேண்டும். 

அதேநேரம், உள்ளூராட்சி மன்றங்களுக்கு சொந்தமான கடைகள் பல உரிமம் மாற்றம் செய்யப்படாமல் நீண்ட காலமாக உள்ளன. அவற்றைத் தீர்ப்பதற்கு விரைவான பொறிமுறையைத் தயாரிக்கவேண்டும்.

உள்ளூராட்சி மன்றங்கள் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு விதமான முதலீட்டாளர்களையும் ஈர்க்கவேண்டும். முதலீட்டாளர்கள் அனுமதிகளைப் பெற்றுக் கொள்வதில் உள்ள இழுபறிகள் காரணமாக திரும்பிச் செல்கின்றனர். எனவே உள்ளூராட்சி மன்றங்கள் தங்கள் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் முதலீட்டாளர்களை ஈர்த்துக்கொள்ளவேண்டும்.

 இதேநேரம், முதலீட்டாளர்களுக்கு நீண்ட கால குத்தகையை வழங்குவதற்கு உள்ளூராட்சி மன்றங்கள் தங்களின் சபைத் தீர்மானத்துடன் உரியவாறு அனுப்பி வைத்தால் அனுமதி வழங்க முடியும் 

சபைகள் தங்களின் வருமானங்களை உயர்த்தும் வகையில், மிக நீண்ட காலம் மேற்கொள்ளப்படாதுள்ள சோலை வரி மீளாய்வை துரிதமாகச் செய்து முடிக்க வேண்டும்.

சபைகள் தங்களின் ஆளுகைக்கு உட்பட்ட மயனாங்களின் எல்லைகளை உரியமுறையில் அடையாளப்படுத்தி அவற்றை அழகுபடுத்தவேண்டும். 

வாகனப் பாதுகாப்பு தரிப்பிடங்கள் ஒழுங்குமுறைப்படுத்தப்படுவதுடன் அங்கு ரசீது வழங்குபவர்களுக்கு சீருடை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். 

No comments