Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கட்டுக்கோப்பாக வாழ்ந்த எமது சமூகம் இன்று அவ்வாறில்லாமல் இருக்கின்றது - வடக்கு ஆளுநர் கவலை


கட்டுக்கோப்பாக வாழ்ந்த எமது சமூகம் இன்று அவ்வாறில்லாமல் இருக்கின்றது. சமூகத்தின் மீதான அக்கறை என்பதும் குறைந்து செல்கின்றது. ஒரு சிலர் மாத்திரமே எமது சமூகத்தை மீட்டெடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் - அக்கறையுடன் செயற்படுகின்றனர் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். 

சுவிற்சர்லாந்து உறவுகளும் நித்திலம் கலையகமும் இணைந்து நடத்திய கலைஞர் மதிப்பளிப்பு மற்றும் திரையிசை வெளியீடு என்பன முகமாலை சிவபுர வளாகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை  மூத்த சட்டத்தரணி சோமசுந்தரம் தேவராஜா தலைமையில் நடைபெற்றது. 

இந்த நிகழ்வில் ஈழத் தமிழ் கலைஞர் ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஆரம்பித்து வைத்த ஆளுநர் அவர்கள், 'மகரந்தம்' திரையிசையையும் வெளியிட்டு வைத்தார். அத்துடன் தூவானம் திரைப்படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் மற்றும் ஈழத் தமிழ் ஒன்றிய கலைஞர்களையும் மதிப்பளித்தார். 

அதனை தொடர்ந்து ஆளூநர் உரையாற்றும் போது,

 மிக நீண்ட காலத்தின் பின்னர் வித்தியாசமான நிகழ்வொன்றில் நான் பங்கேற்றிருக்கின்றேன். எமது சமூகத்தின் போக்கு தொடர்பில் அதிகம் கவலையடைந்து, அதை மாற்றுவதற்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற துடிப்புள்ள ஒருவராக மருத்துவர் சிவன்சுதன் அவர்களை எனக்கு நீண்ட காலமாகவே தெரியும். 

எமது சமூகம் எவ்வாறு கட்டுக்கோப்புடன் வாழ்ந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். புறக்காரணிகளால் அது மாற்றியமைக்கப்பட்டுள்ளதா அல்லது எமது சமூகமே அவ்வாறு மாறிவிட்டதா என்பது எனக்குத் தெரியவில்லை. எப்படி இருந்த நாம் இப்போது எப்படி இருக்கின்றோம். 

சமூகத்தை கலையால் மீட்டெடுக்கும் முயற்சியில் மருத்துவர் சிவன்சுதன் அவர்கள் ஈடுபட்டுள்ளது பாராட்டத்தக்கது. வடக்கு, கிழக்கு, மலையகம் என தமிழர்கள் வாழும் அனைத்துப் பிரதேசங்களிலும் உள்ள கலைஞர்களை ஒன்றிணைத்தமை மிகப் பெரிய விடயம். எமது சமூகம் எம்மவர்களின் திறமைகளைப் பாராட்டுவது குறைவதுதான். ஆனாலும், மருத்துவர் சிவன்சுதன் போன்றவர்கள் எங்கள் கலைஞர்களைப் பாராட்டுவதற்கு எடுத்துக்கொண்ட முயற்சி சிறப்பானது. 

இப்போது நல்லது செய்வதற்கு கூடுதலாக எல்லோரும் யோசிக்கின்றார்கள். நல்லது செய்வதில்தான் குறைகண்டு பிடிப்பதற்கு பலர் இருக்கின்றார்கள். ஆனால் தவறான விடயம் தொடர்பில் எவரும் குறைகண்டுபிடிப்பதுமில்லை அதைத் தவறு என்றும் சொல்லுபவர்களும் இல்லை. விமர்சகர்களும் இப்போது மாறிவிட்டார்கள் என்றே எண்ணத் தோன்றுகின்றது. எது எப்படியிருப்பினும், எமது சமூகத்தை வழிப்படுத்துவதற்கு கலைஞர்கள் எடுத்துக்கொள்ளும் வகிபாகம் மிகவும் பொறுப்புமிக்கது. அதை அவர்கள் சிறப்பாகச் செய்ய வாழ்த்துகின்றேன், என்றார் ஆளுநர்.

இந்த நிகழ்வில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி சி.ரகுராம் மற்றும் யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் முன்னாள் பீடாதிபதி சு.பரமானந்தம் ஆகியோர் சிறப்ப விருந்தினர்களாகவும் கலந்துகொண்டிருந்தனர். 






No comments