பொலிஸ் அதிகாரிகளுக்காக 7,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பாராளுமன்ற வரவு செலவுத் திட்டக் குழுநிலை விவாதத்தில் இன்று (18) கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இந்தக் கொடுப்பனவு எதிர்வரும் மாதத்திலிருந்து வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்தக் கொடுப்பனவு பொலிஸ் அதிகாரிகளின் சீருடை மற்றும் பாதணிகளுக்காக வழங்கப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.
பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:
"பொலிஸ் அதிகாரிகளின் சீருடை மற்றும் பாதணிகளுக்காக அந்தக் கொடுப்பனவை வழங்குவதற்கு நேற்று அமைச்சரவை தீர்மானம் எடுத்தது. அதன்படி, ஒவ்வொரு பொலிஸ் அதிகாரிக்கும் ரூபா 7,000/- கொடுப்பனவு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்காக 2025 ஆம் ஆண்டிற்காக 1,100 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்தக் கொடுப்பனவு எதிர்வரும் மாதமே அந்த அதிகாரிகளுக்கு வழங்கப்படும். அத்துடன், அதிகாரிகளின் விளையாட்டுப் பாதணிகள் மற்றும் உடைகளுக்காகவும் கொடுப்பன ஒன்றை அதிகாரிகளுக்கு வழங்க அமைச்சரவை தீர்மானம் எடுத்துள்ளது. அடுத்த வாரமே அதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று நம்புகிறோம்." என்றார்






No comments