முல்லைத்தீவில் இருந்து ஊடகவியலாளர் சுமந்தன் வழங்கிய தகவல்.
கிளிநொச்சியிலிருந்து புதுக்குடியிருப்பு வரை பேருந்து சேவை நடைபெறுகிறது. அதிலும் A - 35 நெடுஞ்சாலையில் மாணிக்கப்பிள்ளையார் கோவிலடி, மூங்கிலாறு, கைவேலி மஞ்சள் பாலம் பகுதிகள் வீதியை மூடி வெள்ளம் பாய்வதால் பேருந்துகள் போன்ற வாகனங்கள் மட்டும் பயணிக்கின்றன.
இருட்டுமடு, குரவில் உட்பட்ட பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
புதுக்குடியிருப்பு நகரில் வெள்ளம் தேங்கியுள்ளது.
புதுக்குடியிருப்பு சிறீ சுப்பிரமணிய வித்தியாசாலையின் அருகாக உள்ள வீதியின் பாலம் உடைந்து காணப்படுகிறது. அந்தப் பகுதி முற்றாக நீரால் நிறைந்து காணப்படுகிறது. ஆனந்தபுரம், மந்துவில் உட்பட்ட பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி தருகின்றன.
வட்டுவாகல் கரையிலிருந்து மறு கரை வரை நீர் மட்டம் வீதியின் மேலாக ஒரே மட்டமாக வெள்ளமாக காட்சி தருகிறது. புதுக்குடியிருப்பிலிருந்து கேப்பாபுலவு ஊடாக பயணிக்கும் பாதை, கள்ளியடிப் பகுதியில் பல கிலோமீற்றருக்கு வெள்ளக்காடாக காணப்படுவதால் அந்தப் பாதைப் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.
மாங்குளத்தின் ஊடாக ஒட்டுசுட்டான் ஒட்டுசுட்டான் ஊடாக புதுக்குடியிருப்பு பாதைகளும் போக்குவரத்து செய்ய முடியாத அளவிற்கு நீர் பாய்வதால் துண்டிக்கப்பட்டுள்ளன.
சாதாரண மழைக்கே பாதிக்கப்படும் புதுக்குடியிருப்பு - ஒட்டுசுட்டான் மார்க்கத்தில் உள்ள மன்னாகண்டல் மற்றும் பேராற்று பகுதி மக்களின் நிலை என்ன? என்பதை அறிய முடியவில்லை.
அதேவேளை முள்ளியவளை ஊடாக மாங்குளம் தண்ணீரூற்று ஊடாக நெடுங்கேணிபகுதிக்கான போக்குவரத்துப் பாதைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.
அம்பலவன்பொக்கணை, மாத்தளன் பகுதிகளில் உள்ள மக்கள் பெருங்கடலுக்கும் சிறுகடலுக்கும் இடையில் சிக்கிய நிலையில் இரணைப்பாலையைச் சேர்ந்த மக்களால் படகுகள் மூலம் மீட்கப்பட்டுவருகின்றனர்.
பெருங்கடல் (இந்துசமுத்திரம்) நீர் அளவு கூடியிருப்பதால் எதிர்பார்க்கும் அளவிற்கு தரையில் சேரும் நீர் கடலில் கலப்பதில் தாமதம் காணப்படுகிறது. இதனால் சிறுகடலில் சேரும் நீர் அளவு அதிகரித்து வருவதால் அம்பலவன் பொக்கணை, மாத்தளன் அதேபோல ஆனந்தபுரம், மந்துவில், இரணைப்பாலையின் ஒரு பகுதி என்பனவற்றில் உள்ள மக்கள் அவலப்படுகின்றனர்.
தொலைத்தொடர்புகள் செயற்படாமையினால் அரச கட்டமைப்பு செயற்படவில்லை. மக்களே மக்களைக் காப்பாற்ற வேண்டிய இக்கட்டான நிலை காணப்படுகிறது.
வெள்ளத்துள் சிக்கியிருக்கும் மக்களை எங்கே அழைத்துச் செல்வது என்ற நிலை காணப்படுகிறது.
இதனாலேயே பெருமளவான மக்கள் அந்தப் பகுதிகளிலிருந்து வெளியேற முடியாத இக்கட்டுக்குள் சிக்குண்டிருக்கின்றனர்.













No comments