நாட்டைப் பாதித்துள்ள மோசமான வானிலை காரணமாக, உயர்தரப் பரீட்சை உள்ளிட்ட அனைத்துப் பரீட்சைகளும் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, அடுத்த சில நாட்களுக்கு உயர்தரப் பரீட்சை நடத்தப்பட மாட்டாது என குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் உள்ள பரீட்சை நிலையங்களை அண்மித்த பாடசாலைகள் மற்றும் பிரதான வீதிகள் வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் தடைப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் சிரமங்களைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
அதன்படி, டிசம்பர் 05ஆம் திகதி வரை நடைபெறவிருந்த உயர்தரப் பரீட்சை இவ்வாறு மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும், 12ஆம் தர மாணவர்களுக்காக டிசம்பர் 06ஆம் திகதி நடைபெறவிருந்த பொது தகவல் தொழில்நுட்பப் பரீட்சையும் மறு அறிவித்தல் இன்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சிரமங்கள் மற்றும் தடைகளால் மன அழுத்தத்தில் உள்ள இந்த நேரத்தில், மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக இந்திகா லியனகே மேலும் கூறினார்.
இருப்பினும், இந்த இரண்டு பரீட்சைகளும் இயல்பு வாழ்க்கை சீரடைந்தவுடன் நடத்தப்படும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.
உயர்தரப் பரீட்சைக்கான திருத்தப்பட்ட திகதிகள் பரீட்சைகள் திணைக்களத்தால் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் ஊடகச் சந்திப்பில் தெரிவித்தார்.
உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் 14 மாவட்டங்களில் உள்ள 15 நிலையங்களில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், மோசமான வானிலை காரணமாக அந்த மதிப்பீட்டுப் பணிகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கூறினார்.
அத்துடன், இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தால் நவம்பர் 29, 30 ஆகிய இரு தினங்களில் நடத்தப்படவிருந்த ஆட்சேர்ப்புப் பரீட்சைகள் மற்றும் வினைத்திறன் தடைத் தாண்டும் பரீட்சைகளும் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
அந்தப் பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.






No comments