Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வடக்கு மாகாணத்தில் வியட்நாமியர்கள் முதலீடு செய்வதற்கான ஊக்குவிப்புகளை வழங்குவோம்


வியட்நாமைப் போல போரை எதிர்கொண்ட வடக்கு மாகாணம் எதிர்நோக்கும் சவால்களை நாங்கள் நன்கு புரிந்துகொள்ள முடியும் என்றும், வடக்கு மாகாணத்தில் வியட்நாமியர்கள் முதலீடு செய்வதற்கான ஊக்குவிப்புகளை வழங்குவோம் என்றும் இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் ட்ரின் தி தாம் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்த வியட்நாம் தூதுவர் தலைமையிலான குழுவினர், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையிலான குழுவினரை நேற்றைய தினம் திங்கட்கிழமை ஆளுநர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர் நா.வேதநாயகன்,

 போருக்குப் பின்னர் வியட்நாம் வேகமாக மீண்டு வளர்ச்சி பெற்ற அனுபவங்கள் வடக்குக்கு பயனுள்ளதாக இருக்கும். போர் முடிந்து 16 ஆண்டுகள் ஆனபோதிலும், வடக்கில் பெருமளவிலான தொழிற்சாலைகள் உருவாகவில்லை. 

விவசாயிகள், மீனவர்கள் தங்கள் மூல உற்பத்திகளை பெறுமதிசேர் உற்பத்திப் பொருட்களாக மாற்றி விற்பனை செய்ய முடியாமல் உள்ளனர். அதற்குத் தேவையான தொழிற்சாலைகள் அவசியம். கிராமப்புற உட்கட்டமைப்பு இன்னும் மேம்படுத்தப்படவேண்டியுள்ளது. தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் இந்த துறைகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது, என்றார்.

வடக்கு மாகாண பிரதம செயலாளர், சுற்றுலாத்துறைக்கு மாகாணம் சிறப்பு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், இந்தத் துறை இன்னும் தொடக்க நிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த தூதுவர் ட்ரின் தி தாம், 

வியட்நாம் ஏற்றுமதி நோக்கிலான விவசாயத்தில் வலுவாக செயல்படுகிறது. அந்த அனுபவங்களை வடக்குடன் பகிர்ந்து கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம். ஏனைய தொழில்நுட்ப அனுபவங்களையும் பகிர முடியும். 

வடக்கு மாகாண அதிகாரிகளை வியட்நாமுக்கு அழைத்து எங்கள் அனுபவங்களைப் பகிரலாம். நீங்கள் முன்வைத்த முதலீட்டு வாய்ப்புகளை வியட்நாமிய முதலீட்டாளர்களுக்கு தெரிவிப்பேன். அவர்களை வடக்கில் முதலீடு செய்ய ஊக்குவிப்பேன். 

அதிக எண்ணிக்கையிலான வியட்நாமியர்கள் தற்போது இலங்கைக்கு பயணம் செய்கின்றனர். வடக்கு மாகாணத்தின் சுற்றுலா மையங்களை அவர்களிடம் அறிமுகப்படுத்தி இங்கு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன், என்றார்.

அத்தோடு, முதலீட்டாளர்கள் நேரத்தை மிச்சப்படுத்த விரும்புவார்கள். எனவே கொழும்பு – யாழ்ப்பாணம் இடையிலான உள்ளூர் விமான சேவை மேலும் வினைத்திறன் பெறுவது அவசியம். வியட்நாமின் மாநிலங்களுடன் வடக்கு மாகாணமும் நேரடி ஒத்துழைப்புக் கட்டமைப்புகளை உருவாக்க விரும்புகிறோம், எனவும் குறிப்பிட்டார்.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், கல்வி, விவசாய, உள்ளூராட்சி, சுகாதார அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் பிரதிப் பிரதம செயலாளர் – திட்டமிடல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.





No comments