Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தேசிய மற்றும் மத ஒற்றுமையைக் கட்டியெழுப்ப தமிழ் முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிபந்தனையின்றி ஆதரவு


அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து, இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும், நமது நாடு எந்தவொரு இனவாத வலையிலும் சிக்குவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். 

அதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு அனைவரும் ஆதரவளிக்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். 

இந்த ஆண்டு டிசம்பரில் நடைபெறவிருக்கும் இலங்கை தினத்திற்காக தற்போது திட்டமிடப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்து எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்தல் மற்றும் கருத்துகள், பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்வதற்காக நேற்றைய தினம் சனிக்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். 

சமூகங்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதன் மூலம் நல்லிணக்கத்துடன் கூடிய இலங்கையை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வையுடன், அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைத்து “இலங்கை தினம்” கொண்டாடத் திட்டமிடப்பட்டுள்ளது. 

அனைத்து இன மக்களையும் ஒன்றிணைத்து இலங்கை தினக் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்படுகின்றமை, இதில் கலந்துகொண்ட அனைத்துக் கட்சித் தலைவர்களாலும் பிரதிநிதிகளாலும் பாராட்டப்பட்டதுடன், இது தொடர்பாக தமது கருத்துக்களையும் பரிந்துரைகளையும் அவர்கள் முன்வைத்தனர். 

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வழிகாட்டுதலின் கீழ், அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் போதைப்பொருள் அச்சுறுத்தலைத் தோற்கடிப்பதற்கான 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாடு மற்றும் நாட்டில் தேசிய மற்றும் மத ஒற்றுமையைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு நிபந்தனையின்றி தாம் ஆதரவளிப்பதாகவும் பிரதிநிதிகள் இதன்போது வலியுறுத்தினர். 

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் தலைமையின் கீழ் ஏற்பாடு செய்யப்படும் இலங்கை தின தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் ஏற்பாடு குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், அரசியல், மத மற்றும் கலாசார பன்முகத்தன்மைக்கு அப்பால், அனைவரும் ஒரு பொதுவான தளத்தில் ஒன்றிணைந்து செயல்படக்கூடிய வகையில் இந்த நிகழ்ச்சிகளையும் செயற்திட்டங்களையும் உருவாக்குமாறு ஏற்பாட்டுக் குழுவிற்கு ஜனாதிபதி மேலும் அறிவுறுத்தினார். 

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முழப்பர், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரின்ஸ் சேனாதிர ஆகியோர் பங்கேற்றனர். 

அவர்களுடன் தமிழ் முற்போக்கு கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தி மனோ கணேசன் மற்றும் பழனி திகம்பரம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி ரிஷாத் பதியுதீன், இலங்கை முஸ்லிம் காங்கிரஸைபிரதிநிதித்துவப்படுத்தி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா, இலங்கை தொழிலாளர் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி காதர் மஸ்தான், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி அமிர்தநாதன் அடைக்கலநாதன், இலங்கை தமிழ் அரசுக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி இளையதம்பி ஸ்ரீநாத், கவிந்தரன் கோடீஸ்வரன், டி.ரவிஹரன் மற்றும் சுயாதீனக் குழுவின் இராமநாதன் அர்ச்சுனா உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

No comments