Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மன்னாரில் முடிவுறுத்தப்பட்ட காற்றாலை எதிர்ப்பு போராட்டம் .



ரோகினி நிஷாந்தன் 

மன்னாரில் 105 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த காற்றாலை கோபுரம் அமைத்தலுக்கு எதிரான போராட்டம் இன்றைய தினம் சனிக்கிழமை மாலை  முடிவுறுத்தப்பட்டது.

இதன்போது  பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்பணி மார்க்கஸ் அடிகளார் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,

"மன்னார் மாவட்டத்தில் மக்களையும் மக்களுடைய வளங்களையும் நமது எதிர்கால சந்ததிகளையும் பாதுகாக்கும் நோக்குடன் எங்களுடைய இந்த சாத்வீகப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 105 வது நாளைக் கடக்கின்றது.

இந்த 105 வது நாளிலே நாங்கள் நமது ஜனாதிபதியுடைய அமைச்சரவை முடிவினை சற்று பரிசீலித்து எமது போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திக் கொள்கிறோம் .

அத்தோடு எமது போராட்டத்தில் நாங்கள் முன்வைத்த   கோரிக்கைகள் அரசினாலே கேட்கப்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. மேலும்  கனியமண் அகழ்வுக்காக எங்களுடைய மாவட்டத்தில் எந்தவித அனுமதியையும் வழங்க வேண்டாம் என்று நாங்கள் அரசாங்கத்தை அன்போடு கேட்டுக் கொள்வதோடு மன்னார் தீவில் இருந்து வெளியே கொண்டு செல்லப்படும் மணல் வாகனங்கள் பொலிஸாரினால்   பரிசோதிக்கப்பட்டு உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா என சோதனைக்கு உட்படுத்தி தகவல்களை உரிய அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். 

 எமது தீவிலே எந்தவிதமான மண்ணகழ்வு நடவடிக்கைக்கும் எமது அரசாங்கம் அனுமதி வழங்காது என்ற   நம்பிக்கையுடனும் வெகு விரைவிலே அமைச்சரவை முடிவினை ஒரு தேசிய கொள்கையாக அறிவிக்கும் என்ற நம்பிக்கையுடனும்  எங்களுடைய போராட்டத்தை நிறுத்திக் கொள்கிறோம். 

எதிர் காலத்தில் இது குறித்த நடவடிக்கைகள் அனைத்தையும் கவனித்துக் கொள்வதற்காக எல்லா சமூக மக்களையும் உள்ளடக்கிய ஒரு கண்காணிப்பு குழுவினரை மாவட்ட செயலர் தலைமையில் உடனடியாக அமைத்து அந்தக் குழுவின்  கண்காணிப்பின் கீழே எல்லாவிதமான செயற்பாடுகளையும் முன்னெடுப்பது மிகவும் சிறந்ததாக அமையும் என்பதை போராட்டக் குழுவின் சார்பாகவும் எமதுபிரஜைகள் குழுவின்  சார்பாகவும்  போராட்ட களத்தில் இருந்து நான் கேட்டு நிற்கின்றேன்.

 எமது மக்கள் அழிவுறுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை அது எங்களது மாண்புமிகு ஜனாதிபதிக்கு தெரியும்  எனவே அதற்கான நல்ல முடிவுகளை அவர் எடுப்பார் என்ற நம்பிக்கையுடன்  எமது போராட்டத்தை நிறுத்திக் கொள்கிறோம். என்று தெரிவித்தார் .

இதன்போது போராட்ட களத்திலே மன்னார் மாவட்ட ஆயர் அருட்திரு ஞானப்பிரகாசம் ஆண்டகையும் கலந்து கொண்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து போராட்டக் குழுவினர் மன்னார் மாவட்டச்  செயலகத்திற்கு முன்பாக மன்னார்  மாவட்ட செயலர் , ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை வெகு விரைவில்  சரி செய்ய கோரியும்,  மாவட்ட செயலர் தலைமையில்  கண்காணிப்பு குழு ஒன்றை நியமிக்க கோரியும் மனு ஒன்றைக்  கையளித்தனர்.

அதன் பின்னர் மன்னார் மாவட்ட செயலர் போராட்டத்தில் கைவிட்டமை தொடர்பில் போராட்டக் குழுவினருக்கு நன்றி தெரிவித்ததோடு , ஆயர்  அவர்களும் போராட்டக் குழுவினருக்கு அவர்களது அர்ப்பணிப்பான செயற்பாடு தொடர்பில் நன்றி தெரிவித்த நிலையில் போராட்ட குழுவினர் குறித்த போராட்டத்தை முடிவுறுத்திச் சென்றனர் .

No comments