Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். பட்டப்பகலில் இளைஞன் கொலை - சிறைக்குள் தீட்டப்பட்ட திட்டம் ; வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்கள்.


யாழ்ப்பாணத்தில் பட்டப்பகலில் இளைஞன் ஒருவனை வீதியில் துரத்தி துரத்தி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 06 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் இருவர் தலைமறைவாகியுள்ளனர். 

கைதானவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், கொலை சம்பவம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விளக்கமறியல் கைதி ஒருவரின் திட்டமிடலுடன் , அவரின் அறிவுறுத்தலுக்கு அமையவே நடைபெற்றதாக தெரிய வந்துள்ளது. 

அத்துடன் , கொலை சம்பவம் நடைபெறுவதற்கு முதல் நாள் தெல்லிப்பழை பகுதியில் உள்ள வீடொன்றில் கொலைக்கான ஒத்திகையும் நடைபெற்றுள்ளது. 

வீதியில் துரத்தி துரத்தி வெட்டப்பட்ட இளைஞன். 

யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தைக்கு அண்மித்த பகுதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கொட்டும் மழைக்குள் வீதியில் இளைஞன் ஒருவரை வன்முறை கும்பலை சேர்ந்த நால்வர் துரத்தி துரத்தி வெட்டி வீழ்த்தியதில் , இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். 

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்து , தாக்குதலாளிகள் தப்பி சென்ற தடத்தை பின் பற்றி , வாகனம் ஒன்றில் வன்னி பகுதிக்குள் பயணித்துக்கொண்டிருந்த வேளை நேற்றைய தினம் திங்கட்கிழமை தாக்குதலாளிகளில் இருவர் மற்றும் அவர்களை ஏற்றி சென்ற வாகன சாரதி என மூவரையும் கைது செய்து , வாகனத்தையும் மீட்டனர். 

அவர்களை யாழ்ப்பாணம் கொண்டு வந்து விசாரணைகளை முன்னெடுத்ததன் அடிப்படையில், படுகொலை செய்யப்பட்ட இளைஞனின் நடமாட்டங்களை வேவு பார்த்து தகவல் வழங்கியவர், சம்பவ தினத்தன்று இளைஞனை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து தகவல்களை வழங்கியவர்கள் என மூவர் கைது செய்யப்பட்டனர். 

06 பேர் கைது 

சம்பவம் தொடர்பில் இதுவரையில் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , சம்பவத்துடன் நேரடியாக தொடர்பு பட்ட தாக்குதலாளிகளான மேலும் இருவர் தலைமறைவாகியுள்ள நிலையில் , அவர்களையும் கைது செய்வதற்கு பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் தெரியவருவதாவது, 

வன்முறை கும்பல்களுடையே நீண்ட கால பகை

யாழ்ப்பாணத்தில் உள்ள வன்முறை கும்பல்கள் இரண்டுக்கு இடையில் நீண்ட காலமாக இடம்பெற்று வரும் மோதல் சம்பவத்தின் தொடர்ச்சியாக கொக்குவில் சந்தைக்குள் கடந்த மாதம் இளைஞன் ஒருவனை சிலர் தலைக்கவசம் உள்ளிட்டவற்றால் மிக மோசமாக தாக்கி இருந்தனர். அது தொடர்பிலான சிசிரிவி காணொளிகள் சமுக வலைத்தளங்கள் , ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. 

அது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தியும் நாடாளுமன்றில் , யாழில் இயங்கும் வன்முறை கும்பல்கள் , வட்டி தொழிலில் ஈடுபடும் மாபியாக்களை கட்டுப்படுத்த வேண்டும் என கோரி இருந்தார். 

அதனால் பொலிஸாருக்கு ஏற்பட்ட கடும் அழுத்தம் காரணமாக , கொக்குவில் சந்தைக்குள் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் பிரதான சந்தேக நபரை கைது செய்து , நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து, நீதிமன்ற உத்தரவில் அவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சிறைக்குள் இருந்து திட்டம் 

விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர், தன்னை சிறைக்கு அனுப்பிய நபர்களின் கையும் காலும் வேண்டும் என கந்துவட்டி தொழிலில் ஈடுபட்டு வரும் தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு கூறியுள்ளார். 

அதனை அடுத்து அவரின் ஒழுங்கமைப்பில் மல்லாகம் பகுதியை சேர்ந்த நான்கு இளைஞர்கள் தாக்குதலுக்கு தயார் படுத்தப்பட்டனர். 

ஒரு மாத வேவு நடவடிக்கை

படுகொலை செய்யப்பட்ட இளைஞனின் தாக்குதலுக்கு முன்னர் ஒருவேளை இலக்கான இளைஞனின் வீட்டுக்கு அருகாமையில் வசிக்கும் இளைஞன் ஒருவருடன் தொடர்பினை பேணி கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக இளைஞனின் நடமாட்டம் தொடர்பில் தகவல்களை சேகரித்து உள்ளனர். 

இதற்காக தகவல் வழங்கிய இளைஞன் மற்றும் தகவல்களை பெற்றுக்கொண்ட தரப்பினர் புதிதாக இரண்டு சிம் அட்டைகளை வாங்கி , அவற்றின் மூலமே தகவல்களை பரிமாறி கொண்டனர். 

அதன் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை இளைஞன் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு கையொப்பம் வைக்க , இருவர் அல்லது தனியே தான் செல்வார் என்பதனை உறுதிப்படுத்தி ஞாயிற்றுக்கிழமை தாக்குதலை மேற்கொள்ள நாள் குறித்தனர். 

தாக்குதலுக்கு ஒத்திகை. 

தெல்லிப்பழையில் வட்டி தொழிலில் ஈடுபடும் நபருக்கு சொந்தமான வீடொன்றில் தாக்குதலுக்கான திட்டமிடப்பட்டு , தாக்குதலுக்கான ஒத்திகையும் பார்க்கப்பட்டுள்ளது.

சம்பவ தினத்தன்று ... 

சம்பவ தினத்தன்று ஞாயிற்றுக்கிழமை இருவர் மோட்டார் சைக்கிளில் , திருநெல்வேலி சந்தையில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் உள்ள  உணவகத்திற்கு அருகாமையில் காத்திருந்துள்ளனர். மேலும் இருவர் திருநெல்வேலி சந்தைக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் காத்திருந்துள்ளனர். 

கொக்குவிலில் இருந்து இளைஞன் தனது நண்பனின் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டதும் , கொக்குவில் பகுதியில் இருந்தே இருவர் மோட்டார் சைக்கிளில் அவர்களை பின் தொடர்ந்து வந்துள்ளனர். 

திருநெல்வேலி சந்தி சிக்னல் விளக்கை தாண்டி மோட்டார் சைக்கிள் பயணித்ததும் , திருநெல்வேலி சந்தைக்கு அண்மையில் , தாக்குதலுக்காக காத்திருந்தவர்களுக்கு இளைஞனை பின் தொடர்ந்துள்ளனர். 

சந்தியில் இருந்து 500 மீட்டர் வந்ததும் , உணவத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் தாக்குதலுக்கு தயாராக காத்திருந்தவர்கள் , படுகொலையான இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிளுக்கு குறுக்கே தமது மோட்டார் சைக்கிளை செலுத்தி , மோட்டார் சைக்கிளை வழிமறித்து , பின்னால் இருந்த இளைஞன் மீது வாள் வெட்டு தாக்குதலை நடத்த முயற்சிக்க இளைஞன் இறங்கி வீதியில் ஓடியுள்ளார். 

அவ்வேளை, இளைஞனை பின் தொடர்ந்து வந்த மற்றைய இரு தாக்குதலாளிகளும் இடையில் வழிமறித்து வாள்  வெட்டு தாக்குதலை மேற்கொண்ட வேளை அவர்களிடமும் இருந்து தப்பியோட முயன்றும் கடுமையான வெட்டு காயங்களால் தப்பி ஓட முடியாது. வர்த்தக நிலையம் முன்பாக விழுந்த வேளை இளைஞனின் காலை கணுக்காலுடன் வெட்டி துண்டாக்கி விட்டு தாக்குதலாளிகள் தப்பி சென்றுள்ளனர். 

கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் பின் தொடர்ந்த பொலிஸார்  

சம்பவம் தொடர்பில் கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்த மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் , தாக்குதலாளிகள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற பாதைகளை கண்டறிந்தனர்.

அதன் போது உரும்பிராய் பகுதியில் தாக்குதலாளிகள் தமது ஆடைகளை மாற்றி வாகனம் ஒன்றில் ஏறி தப்பி சென்றுள்ளனர். 

வன்னிக்குள் கைது நடவடிக்கை. 

அதன் அடிப்படையில் வாகனம் தொடர்பிலான தகவல்களை பெற்ற வேளை நேற்றைய தினம் திங்கட்கிழமை வாகனம் வன்னி பகுதியில் பயணித்துக்கொண்டிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் , வாகனத்தை பொலிஸ் குழு வழிமறித்த வேளை வாகனத்தினுள் தாக்குதலாளிகள் இருவர் மற்றும் அவர்கள் தப்பி செல்ல உதவிய வாகன சாரதியும் . தாக்குதல் சம்பவத்தை வழி நடத்தியவருமான கந்துவட்டி தொழில் செய்யும் தெல்லிப்பழையை சேர்ந்த நபரையும் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட மூவரையும் , அவர்கள் பயணித்த வாகனத்தையும் மீட்டு யாழ்ப்பாணம் கொண்டு வந்தனர். அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அத்துடன் தாக்குதலுடன் தொடர்புடைய மேலும் இருவர் தலைமறைவாகியுள்ளனர். 

வாகனங்கள் மீட்பு 

கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து இதுவரையில் , தாக்குதலாளிகள் தப்பி சென்ற வாகனம் , தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் , வாள் ,தாக்குதல் நடாத்தும் போது அணிந்திருந்த ஆடைகள் என்பவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்கள் மல்லாகம் , தெல்லிப்பழை கொக்குவில் பகுதிகளை சேர்ந்த 20 தொடக்கம் 25 வயது வரையிலானவர்கள் எனவும் , கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முற்படுத்தி , பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுக்க மன்றில் அனுமதி கோரவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 









No comments