க.(க்)கா. பொன்னம்பலம் குடும்பத்தினருக்கு யாரையும் விமர்சிக்கும் அருகதை கிடையாது எனவும், இந்த நாட்டில் இடம்பெற்ற இனவழிப்பின் பிதாமகர்களே அவர்கள் என்று சாடியுள்ள ஈ.பி.டி.பி. ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம், கடலட்டை பண்ணைகளில் ஊழல் நடந்தால் நாடாளுமன்ற சிறப்புரிமைக்குள் பதுங்கி இருந்து கதைக்காமல் நிரூபித்துக் காட்டுமாறும் சவால் விடுத்துள்ளார்.
யாழ். ஊடக மையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
"கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கடற்றொழில் அமைச்சு தொடர்பான வரவு செலவத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதற்கு முன்னர் இருந்த கடற்றொழில் அமைச்சர் ஊழலில் ஊறிப் போனவர் எனவும், கடலட்டைப் பண்ணைகள் தவறான முறையில் அமைக்கப்பட்டு அப்போதைய கடற்றொழில் அமைச்சருக்கு தெரிந்தவர்களுக்கும் இலஞ்சம் பெற்றுக் கொண்டும் வழங்கப்பட்டதாக தெரிவித்திருக்கினறார்.
இதற்கு முன்னர் கடற்றொழில் அமைச்சராக இருந்தது எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா என்ற அடிப்படையிலும், அவரின் காலத்திலேயே கடலட்டை பண்ணை என்ற கறுப்பு தங்கம் வடக்கில் வியாபித்தது என்ற அடிப்படையிலும்,
நாடாளுமன்ற சிறப்புரிமைக்குள் பதுங்கி இருந்து வெளியிட்ட கருத்து தொடர்பாக சில விடயங்களை தெரிவிக்க விரும்புகின்றேன்.
கடலட்டைப் பண்ணைகளாக இருக்கட்டும், நீர்வேளாண்மை என்று சொல்லப்டுகின்ற கடலுணவுகளை பண்ணைகளில் வளர்க்கின்ற தொழில்முறையாக இருக்கட்டும், எங்களது செயலாளர் நாயகத்தினால் குறுகிய நலன்களுக்காக திணிக்கப்பட்ட விடயங்கள் அல்ல.
நாட்டிற்கு அந்நியச் செலாவணியை பெற்றுத் தரக்கூடிய வடக்கு கடல் பரப்பிலே கடலட்டையை விருத்தி செய்வதற்கான ஏதுநிலைகள் இருப்பதாக விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலேயே கடற்றொழில் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட டக்ளஸ் தேவானந்தா, வடக்கு கடற்பரப்பிலே அடையாளப்படுத்தப்பட்டுள்ள எமது வளங்கள் மூலம் எமது மக்கள் நன்மையடைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பில், அதனை விருத்தி செய்திருந்தார்.
அவருடைய காலப் பகுதியில் சுமார் 1300 ஏக்கரில் 850 இற்கும் மேற்பட்ட கடலட்டைப் பண்ணைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தப் பண்ணைகள் அனைத்தும் இந்தப் பகுதியை சேர்ந்தவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு வழங்கப்பட்டுள்ள அனைத்து பணணைகளும் அந்தந்த பகுதிகளை சேர்ந்த கடற்றொழில் சங்கங்களின் அனுமதியுடனேயே வழங்கப்பட்டுள்ளன. அரசாங்கத்திற்கு வரி செலுத்தியே பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
இவற்றின் மூலம் சுமார் 3000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. அதைவிட நூற்றுக்கணக்கானவர்களுக்கு மறைமுக வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.
கடலட்டை ஏற்றுமதி ஊடாக 2024 ஆம் ஆண்டு சுமார் 11.7 மில்லியன் டொலர் வருமானம் கிடைத்திருக்கின்றது.
எமது பிரதேச வளங்கள் எமது மக்களுக்கே பலனளிக்க வேண்டும் என்பதற்காக எமது மக்களின் முதலீடுகளை பயன்படுத்தி எங்களுடைய செயலாளர் நாயகத்தின் முயற்சினால் உருவாக்கப்பட்டிருப்பதுதான் கடலட்டைப் பண்ணைகள்.
இங்கே ஊழல் இடம்பெற்றிருப்பதாக சொல்லுகின்றவர்கள் முடியுமானால் அதனை நிரூபித்துக் காட்டும் என்று சவால் விடுக்க விரும்புகின்றோம்.
தமிழ் மக்களைப் பற்றிக் கதைப்பதற்கு க.கா(கணபதி காங்கேயன்) பொன்னம்பலத்தார் குடும்பத்திற்கு என்ன அருகதை இருக்கின்றது?
இன்று இனவழிப்பு பற்றி கதைத்துக் கொண்டிக்கின்றார்கள். இந்த நாட்டிலே இடம்பெற்ற இனவழிப்பின் பிதாமகர்களே இந்த பொன்னம்பலம் குடும்பத்தினர்தான்.
தமிழ் மக்களை நாடு கடத்தும் நயவஞ்சக நோக்கோடு கொண்டு வரப்பட்ட சட்டமூலத்திற்கு ஆதரவளித்து முதன்முதலாக இந்த நாட்டிலே இனவழிப்பை அரங்கேற்றியவர் க(க்)கா பொன்னம்பலம்.
அவரது மகன் குமார் பொன்னம்பலம் 1981 ஆம் ஆண்டு அன்றைய எமது மக்களின் உணர்வுகளை ஏறிமிதிக்கும் வகையிலே ஜே.ஆரினால் உருவாக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்தி சபையை தூக்கி காவடி எடுத்துக் கொண்டு வந்திருந்தார்.
பின்னர் 2009 ஆம் ஆண்டு ராஜபக்சக்களின் காக்கா பிடிப்பதற்காக வெள்ளைக் கொடி விவகாரத்தினை அரங்கேற்றி புலிக்களின் முக்கிய தலைவர்கள் பலர் கொலை செய்யப்பட காரணமாக இருந்தவர் க.கா. பொன்னம்பலத்தின் பேரன்.
இவர்தானா கோட்டாபய ஜனாதிபதியாக வேண்டும் என்பதற்காக 2019 ஆம் ஆண்டு தேர்தலை புறக்கணிக்குமாறு அறிந்திருந்தார். இதனை அப்போது அவர்களுடன் இருந்தவர்களே வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
வராலாறு நெடுகிலும், குறுகிய குடும்ப நலன்களுக்காக தமிழ் மக்களை காட்டிக் கொடுக்கின்ற க.(க்)கா. பொன்னம்பலம் குடும்பத்தினருக்கு யாரைப் பற்றியும் கதைக்கும் அருகதை கிடையாது.
எமது கட்சி - எமது செயலாளர் நாயகத்தின் செயற்பாடுகள் மக்கள் நலன் சார்ந்தே முன்னெடுக்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.






No comments