மியான்மரின் எல்லைப் பகுதியில் ஆயிரக்கணக்கானவர்களைக் கடத்திச் சென்று, அவர்களை அடிமைகளாக வைத்து இணைய மோசடிகளில் ஈடுபடுத்தி வந்த பிரபல குடும்பத்தைச் சேர்ந்த 11 உறுப்பினர்களுக்குச் சீன அரசாங்கம் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது.
மியான்மரின் ஷான் மாநிலத்தில் உள்ள கோகாங் பிராந்தியத்தில் இந்த மோசடி மையங்கள் இயங்கி வந்தன. இந்தக் குடும்பம் அந்தப் பகுதியில் மிகச் செல்வாக்குமிக்க ஒரு மாஃபியா கும்பலாகச் செயல்பட்டு வந்தது. இவர்கள் சீன குடிமக்களைக் குறிவைத்து தொலைபேசி மற்றும் இணையம் ஊடாகப் பல கோடி ரூபாய் மோசடிகளைச் செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த கும்பல், சட்டவிரோத ஆயுதக் குழுக்களைப் பராமரித்தல் மற்றும் கொலைச் சம்பவங்களில் ஈடுபடுதல், வேலை வாய்ப்பு தருவதாகக் கூறி ஆயிரக்கணக்கான சீன மற்றும் ஏனைய நாட்டு இளைஞர்களைக் கடத்திச் சென்று, மோசடி மையங்களில் கட்டாயப்படுத்தி வேலை வாங்கல், இலக்குகளை அடையாத ஊழியர்களைச் சித்திரவதை செய்தல் மற்றும் சிறைவைத்தல். மற்றும் முதலீட்டு மோசடிகள் மூலம் சீனாவிற்குள் பாரிய பொருளாதாரப் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தனர்.
கடந்த 2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், சீன அரசாங்கம் மியான்மர் இராணுவ அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்ததைத் தொடர்ந்து, இந்தக் குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்கள் சீனாவிற்குக் கடத்தப்பட்டு ஒப்படைக்கப்பட்டனர். சீன நீதிமன்றத்தில் இவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட விசாரணையில், இவர்களது குற்றங்கள் மனிதாபிமானமற்றவை மற்றும் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானவை என நிரூபிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில், அக்குடும்பத்தின் தலைவர்கள் உள்ளிட்ட 11 பேருக்கு தற்போது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
மியான்மர், லாவோஸ் மற்றும் கம்போடியா போன்ற நாடுகளில் இயங்கும் இவ்வாறான மோசடி மையங்களை வேரோடு அழிப்போம் எனச் சீனா சூளுரைத்துள்ளது. இந்த மரண தண்டனை நிறைவேற்றம், எல்லை தாண்டிய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு விடுக்கப்பட்ட ஒரு கடும் எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.




.jpeg)


No comments