எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் நாட்டில் பச்சை அரிசி மற்றும் நாட்டரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக மரதகஹமுல சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலைகள் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி விலைகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சங்கத்தின் தலைவர் பி.கே. ரஞ்சித் தெரிவித்தார்.
தற்போதைய சந்தை நிலவரம் குறித்து மேலும் கூறியதாவது:
"இன்றைய நிலவரப்படி மரதகஹமுலவில் முதல் தர நாட்டரிசி ஒரு கிலோவின் மொத்த விலை அதிகபட்சம் 225 ரூபா வரை உள்ளது. வெள்ளை பச்சை அரிசி 208 முதல் 212 ரூபா வரையிலும், சிவப்பு பச்சை அரிசி வகைகள் 205 முதல் 210 ரூபா வரையிலும் விற்பனையாகின்றன.
இருப்பினும், சம்பா மற்றும் கீரி சம்பா மிக அதிக விலையில் உள்ளன. கீரி சம்பா 340 ரூபாவையும், சம்பா 260 ரூபாவையும் கடந்து செல்கின்றன.
சம்பா மற்றும் கீரி சம்பா அரிசியின் விலை அதிகரிக்கும் போது, விவசாயிகள் அவற்றை பயிரிடச் செல்வதால் வெள்ளை பச்சை அரிசி மற்றும் நாட்டரிசிக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும். ஆகையால் நெல் விலை அதிகரிப்பதாயின், இந்த மூன்று வகைகளுக்கும் விவசாயிகளுக்கு நியாயமான விலை வழங்கப்பட வேண்டும்.
பண்டிகைக் காலத்தில் சம்பா மற்றும் கீரி சம்பா விலைகள் மேலும் அதிகரிக்கலாம்" என தெரிவித்தார்.







No comments