2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில், விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் உள்ள விவசாய காப்புறுதிச் சபையினால் விவசாயிகளுக்காக 'காப்புறுதி மாதம்' பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி நெல், மக்காச்சோளம், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், சோயா அவரை, மிளகாய் உள்ளிட்ட அனைத்துப் பயிர்களுக்கும் வறட்சி, வெள்ளம், காட்டு யானைகள், பூச்சித் தாக்கம், தீ விபத்துக்கள், நோய்கள் மற்றும் பீடைகளினால் ஏற்படும் அனைத்துச் சேதங்களுக்கும் காப்புறுதிப் பாதுகாப்பைப் பெற்றுக்கொள்ள முடியும்.
குறைந்த தவணைக் கட்டணத்தைச் செலுத்திப் பெற்றுக்கொள்ளும் இக்காப்புறுதித் திட்டங்களின் மூலம், இயற்கை அனர்த்தங்கள் உள்ளிட்ட பயிர்ச் சேதங்களுக்கு இழப்பீடு பெற்றுக்கொள்ள முடியும்.
கௌபி, பாசிப்பயறு, உளுந்து, குரக்கன், நிலக்கடலை, எள், கொள்ளு ஆகிய பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூபா 60,000/- பெற்றுக்கொள்வதற்குச் செலுத்த வேண்டிய தவணைக் கட்டணம், காப்புறுதித் தொகையில் 7% ஆகும்.
இது தவிர, சர்க்கரைவள்ளி, மரவள்ளி, பால் கிழங்கு, பீட்ரூட், கோவா, கரட், லீக்ஸ், சிறிய வெங்காயம், கத்தரி, வெண்டை, அவரை, குடை மிளகாய், தக்காளி, பாகற்காய், பூசணி ஆகிய பயிர்களுக்கும் ஏக்கருக்கு காப்புறுதித் தொகையில் 7% செலுத்துவது போதுமானதாகும்.
அதன்படி, சர்க்கரைவள்ளி செய்கையில் ஏக்கருக்கு ரூபா 100,000/- காப்புறுதிப் பாதுகாப்பைப் பெறுவதற்குச் செலுத்த வேண்டிய காப்புறுதித் தவணைக் கட்டணம் ரூபா 7,000/- ஆகும்.
இஞ்சி, மஞ்சள், கறுவா, மிளகு, அன்னாசி, பப்பாளி மற்றும் வாழை செய்கைகளுக்கும் மிகச் சலுகை அடிப்படையிலான தவணைக் கட்டணங்களின் கீழ் காப்புறுதிப் பாதுகாப்பைப் பெற்றுக்கொள்வதற்காகக் கவர்ச்சிகரமான காப்புறுதித் திட்டங்களை விவசாய காப்புறுதிச் சபை அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டங்களில் பங்களிப்புச் செய்து பயிர்ச் சேத அபாயங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு விவசாய மற்றும் விவசாய காப்புறுதிச் சபை விவசாயிகளிடம் கேட்டுக்கொள்கிறது.
இது தொடர்பான விபரங்களை விவசாய காப்புறுதிச் சபையின் தலைமை அலுவலகம் மற்றும் நாடு முழுவதும் அமைந்துள்ள மாவட்ட அலுவலகங்களில் பெற்றுக்கொள்ள முடியும்.






No comments