"நீ குற்றமற்றவள் என நிரூபித்துக் காட்டு" எனக் கூறி, மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி, தீப்பெட்டியைக் கொடுத்து அவரைத் தீக்குளிக்கச் செய்த கணவனைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மட்டக்களப்பு, முனைக்காடு பகுதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முனைக்காடு நாகதம்பிரான் கோவில் வீதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியே மனைவியை தீ மூட்ட தூண்டிய குற்றத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கணவன் - மனைவிக்கு இடையே பண விவகாரம் தொடர்பாகத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன்போது வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில், கணவன் மனைவியின் நடத்தையில் சந்தேகமுற்று, "நீ குற்றமற்றவள் என்பதை நிரூபித்துக் காட்டு" என வற்புறுத்தியுள்ளார்.
அதன்பின்னர் மனைவியின் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி, தீப்பெட்டியைக் கொடுத்து மனைவியை தீ வைக்கத் தூண்டியுள்ளார்.
இதனால் தீப்பற்றி எரிந்த மனைவி படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மனைவியைத் தீக்குளிக்க வைத்த பின்னர், கணவன் தனக்குத் தானே கூரிய ஆயுதத்தால் குத்தி காயப்படுத்திக் கொண்டுள்ளார்.
இதனையடுத்து, மனைவியைக் கொலை செய்ய முயன்றமை குற்றச்சாட்டில் கணவன் கொக்கட்டிச்சோலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.







No comments