மட்டக்களப்பு வாகரை, சம்பு களப்பு வயல் பிரதேசத்தில் புதைக்கப்பட்டிருந்த பெருமளவிலான வெடிபொருட்களை வாகரை விசேட அதிரடிப்படையினர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மீட்டுள்ளனர்.
இதன் போது, 38 ஆர் பிஜி குண்டுகள், 38 சார்ஜர்கள் மற்றும் ஐந்து கைக்குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன.
இப்பகுதியில் விவசாயச்செய்கையில் ஈடுபட்டிருந்த நபரொருவர், வயலைச்சுற்றி எல்லை வேலி அமைப்பதற்காகக் குழி தோண்டிய போது மர்மப்பொருட்கள் தென்படுவதைக்கண்டு வாகரை விசேட அதிரடிப்படையினருக்குத் தகவல் வழங்கியுள்ளார்.
அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்குச்சென்ற அதிரடிப்படையினர் விசாரணைகளை மேற்கொண்டதுடன், அங்கு வெடிபொருட்கள் இருப்பதை உறுதிப்படுத்தினர்.
பின்னர் வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றின் அனுமதியைப்பெற்று, பலத்த மழைக்கு மத்தியிலும் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
குறித்த வெடிபொருட்கள் பொலித்தீன் பைகளில் சுற்றப்பட்டு மிகவும் நுட்பமான முறையில் ஆழமான குழியில் புதைக்கப்பட்டிருந்தன. கடந்த யுத்த காலத்தில் இப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் மருத்துவ முகாம் அமைந்திருந்ததாகவும், அவர்களாலேயே இவை புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும் படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.










No comments