Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வடக்கில் பின்தங்கிய தனிப்படுத்தப்பட்ட கிராமங்களின் அபிவிருத்திக்கு முன்னுரிமை கொடுங்கள்


2026ஆம் ஆண்டுக்குரிய வேலைத்திட்டங்களை எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்துக்குள் நிறைவேற்ற வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

2026ஆம் ஆண்டுக்கான வடக்கு மாகாண சபையின் பாதீட்டுப் புத்தகத்தை (நிதிக்கூற்று) உத்தியோகபூர்வமாக வெளியிடும் நிகழ்வு, வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

அதன் போது, 2026ஆம் ஆண்டுக்கான வடக்கு மாகாண சபையின் பாதீட்டுப் புத்தகத்தை ஆளுநர் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்ததுடன், அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் பிரதம கணக்காளர்கள் ஆகியோரிடம் கையளித்தார்.

அதனைத் தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர், 

2025ஆம் ஆண்டுக்குரிய வரவு – செலவுத் திட்டமானது நாடாளுமன்றத்தில் மார்ச் மாதமே நிறைவேற்றப்பட்டிருந்தது. அதன் பின்னரே, அதாவது ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலேயே எங்களால் திட்டப் பணிகளை ஆரம்பிக்கக் கூடியதாக இருந்தது. 

அதனைவிட, புதிய கொள்முதல் வழிகாட்டுத்தல்களும் அதன் பின்னரே வெளியிடப்பட்டிருந்தன. மேலும், எமது ஆளணித் தொகுதியில் பெருமளவு வெற்றிடங்கள் நிரப்பப்படாமலும் இருந்தன. இவ்வாறான பெரும் சவால்களுக்கு மத்தியிலேயே, எமக்குக் கிடைத்த நிதியை நாம் வினைத்திறனாகச் செலவு செய்திருக்கின்றோம்.

ஆனால், 2026ஆம் ஆண்டில் இவ்வாறான சவால்கள் பெரிதாக இல்லை. நாம் இந்த மாதமே இந்த ஆண்டுக்குரிய திட்டங்களை ஆரம்பிக்க முடியும். அத்துடன் கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களின் தொடர் வேலைகளையும் இப்போதே தொடங்க முடியும். ஆளணிப் பற்றாக்குறையும் ஓரளவு நிவர்த்தி செய்யப்பட்டிருக்கின்றது. எனவே, கொள்முதல் பணிகளை ஆண்டின் முதல் காலாண்டுக்குள்ளேயே நிறைவு செய்யவும் முடியும். இதன் மூலம் ஓகஸ்ட் மாதத்துக்குள் திட்டங்களை முழுமைப்படுத்த வேண்டும்.

நாம் எமது திட்டங்களை முன்னெடுக்கும்போது, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் கொள்கையையும் கவனத்திலெடுக்க வேண்டும். அரசாங்கம் நிலைபேறான அபிவிருத்தியை ஊக்குவிக்கின்றது. அதைப்போல ஏற்றுமதியையும், உற்பத்திப் பொருளாதாரத்தையும் வலுப்படுத்துகின்றது. கிராமிய வறுமை ஒழிப்பு, டிஜிட்டல் மயமாக்கல், முதலீட்டுக்கு உகந்த சூழல் மற்றும் சுற்றுலாத்துறை எனப் பல்வேறு விடயங்களை அரசாங்கம் ஊக்குவித்து வருகின்றது. எமது திட்டமிடல்களின்போது இவற்றையும் கவனத்திலெடுத்துச் செயற்பட வேண்டும்.

வடக்கு மாகாணத்தில் பின்தங்கிய மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களின் அபிவிருத்திக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பல ஆண்டுகளாக அபிவிருத்தியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட மற்றும் புறக்கணிக்கப்பட்ட கிராமங்களுக்கே நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும், என ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பிரதம செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் பிரதம கணக்காளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments