எமது பூர்வீக காணியை கடற்படையினர் நிரந்தரமாக சுவீகரிக்க முயற்சித்துள்ளனர். அந்த காணியையே மகளுக்கு சீதனமாக கொடுக்க இருக்கிறேன். எனவே எனது மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டாவது எமது காணியை எம்மிடமே ஒப்படைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாயார் ஒருவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எழுவைதீவு பகுதியில் கடற்படையினரின் முகாம் அமைந்துள்ள தனியார் காணியை நிரந்தரமாக சுவீகரிக்க கடற்படையினர் முயற்சித்து வரும் நிலையில் எதிர்வரும் 20ஆம் திகதி காணி அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்நிலையில் கடற்படையினருக்காக சுவீகரிக்கப்படவுள்ள காணிகளில் ஒரு காணியின் உரிமையாளரான தாயார் ஒருவரே அவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
எமது பூர்வீக காணியை கடந்த 1990 ஆம் ஆண்டுகளின் பின்னர் கடற்படையினர் அடாத்தாக கையகப்படுத்தி முகாம் அமைத்துள்ளனர்.
அந்த காணியில் அக்கால பகுதியிலேயே சிறிய வீடு ஒன்றை நாம் கட்டி வாழ்ந்து வந்த நிலையில், கடற்படையினர் அக்காணியை கையகப்படுத்தி முகாம் அமைத்துள்ளனர்.
அந்நிலையில் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எமது காணியை மீள கையளிக்குமாறு கடற்படையினரிடம் கோரி வருகிறோம். பல அரச தரப்பினரையும் கோரியுள்ளோம். எதற்கும் பயனில்லை.
எனது கணவர் புற்றுநோயால் பீடிக்கப்பட்டுள்ள நிலையில் மகன் மனநலம் பாதிக்கப்பட்டவராக காணப்படுகிறார். அந்நிலையில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இவர்களை பராமரித்து வருகிறேன்.
நான் பல காலமாக பல அரச அதிகாரிகளிடம் எனது குடும்ப நிலையை கருத்தில் கொண்டு கடற் படையினரிடம் இருந்து எனது காணியை விடுவித்து தருமாறு தல தடவைகள் கோரிக்கை முன்வைத்தேன் எதுவும் நடந்ததில்லை.
தற்போதைய ஜனாதிபதி "மக்களின் காணிகள் மக்களுக்கே .." என தெரிவித்து வருகிறார். ஆனால் எனது காணியை கடற்படைக்கு சுபீகரிப்பது ஜனாதிபதிக்கு தெரியாத என கேட்க விரும்புகிறேன்.
எனது பூர்வீக நிலத்தை கடற்படையினருக்கு கொடுப்பதற்கு தயார் இல்லை எனது குடும்ப நிலையை கருத்தில் கொண்டு யாழ் வரும் ஜனாதிபதி எனது காணியை எனக்கே பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்







No comments