தமிழத் தேசியக் கட்சிகளுடன் இணைந்து கிவுல்ஓயா திட்டத்தை முறியடிப்போம் என்றும் , போராட்டத்தில் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளது.
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அரசியல் குழு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மெய்நிகர் மூலமாக கூடியது. இதில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் கட்சியின் தலைவர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதிலையே குறித்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கை அரசாங்கம் மாகாணசபை தேர்தல் தொடர்பாக பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைத்திருப்பதால் மாகாணசபை தேர்தல்கள் பல வருடங்கள் தள்ளிப்போகலாம் என்ற கருத்துகள் முன்வைக்கப்பட்டதுடன், தேர்தலை மிக விரைவில் நடாத்துவதற்கான அழுத்தங்களை ஏனைய கட்சிகளுடன் இணைந்து உருவாக்க வேண்டும் எனவும் மாகாணசபைத் தேர்தலின் அவசியத்தை இராஜதந்திர சமூகத்திற்கு எடுத்துரைக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
ஏற்கனவே இவ்விடயங்கள் தொடர்பாக இந்தியா, நெதர்லாந்து, மற்றும் கனடா தூதுவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது தொடர்பாகவும் எடுத்துரைக்கப்பட்டது. அத்துடன் அரசாங்கம் கொண்டுவர யோசிக்கும் புதிய அரசியல் யாப்பு தொடர்பாகவும் அந்த யாப்பில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பாகவும் அதில் அடங்க வேண்டிய விடயங்கள் குறித்தும் சகல தமிழ் கட்சிகளுடனும் கருத்தொற்றுமைகள் ஏற்படுத்தப்பட்டு ஒருமித்த ஒரு தீர்வுத்திட்டத்தை அரசாங்கத்திடம் கையளிக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக பல்வேறுபட்ட ஜனாதிபதிகளால் பல்வேறு குழுக்கள் நியமிக்கப்பட்டு பல்வேறு வரைபுகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றை ஆராய்ந்து, தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு வரைபை அனைத்துக்கட்சிகளும் இணைந்து உருவாக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
நாடு மிகவும் வங்குரோத்தான சூழ்நிலையில் இருக்கின்றபோதும் நாட்டில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளப்பெருக்கு அதனால் ஏற்பட்ட பல்லாயிரம்கோடி பெறுமதியான நட்டங்கள் உயிரிழப்புகள், உள்நாட்டு, வெளிநாட்டு கடன்கள் என பல்லாயிரம்கோடி இருக்கின்ற வேளையில், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கிய கிவுல்ஓயா என்ற புதிய நீர்ப்பாசனத் திட்டம் ஒன்றை உருவாக்கி ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள சிங்களக் குடியேற்றங்களுக்கு மேலதிகமாக இன்னமும் சிங்களக் குடியேற்றங்களை விஸ்தரிக்கும் நோக்கில் அமுல்படுத்த எத்தனிக்கும் இத்திட்டத்தை ஒட்டுமொத்த தமிழ் மக்களும் நிராகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி முன்வைப்பதுடன், இதற்கு அரசாங்கம் செலவு செய்ய உ;த்தேசித்துள்ள 23500 கோடி ரூபாயை எப்படி புரட்டப்போகிறார்கள் என்பதை அரசாங்கம் இலங்கை மக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் வெளிப்படுத்த வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
கிவுல்ஓயா திட்டத்திற்கு எதிராக நடைபெற உள்ள போராட்டத்தில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.




.jpg)


No comments