பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞருக்கு போதைப்பொருள் கலந்த தேநீரை கொடுக்க முயன்ற யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.
அதேவேளை குறித்த பெண் கொண்டு சென்ற சண்ட்விச்சில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைக் குளிசையொன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
பொல்கஸ்ஓவிட்ட பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞன், போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்காக பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவரது காதலியான 22 வயதான யுவதி இளைஞரைப் பார்பதற்காக சென்றுள்ளார்.
இளைஞனுடன் சிறிது நேரம் உரையாடிய பின், இளைஞனுக்கு தேநீர் கொடுக்க பொலிஸ் உத்தியோகத்தர்களின் அனுமதி பெற்று வெளியே சென்ற யுவதி, சிறிது நேரத்தின் பின்னர் சிறிய பையினுள் உறிஞ்சுக்குழாய் (Straw) இடப்பட்ட தேநீர் மற்றும் செண்ட்விச் (Sandwich) என்பவற்றை எடுத்துக்கொண்டு பொலிஸ் நிலையத்திற்கு வந்துள்ளார்.
இதன்போது பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலுக்கமைய, அவர் கொண்டு வந்த தேநீர் மற்றும் செண்ட்விச் என்பவற்றைச் சோதனையிட்டபோது, அவற்றில் போதைப்பொருள் இருப்பது தெரியவந்துள்ளது.
அதனை அடுத்து களுபோவில பகுதியை சேர்ந்த குறித்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.







No comments