Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு எதிரானவர்கள் அல்ல நாம் - நல்லூர் பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் கூட்டாக அறிக்கை


தேசிய மக்கள் சக்தியினர் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு எதிரானவர்கள் அல்ல, ஆனால் நாட்டைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் அரசிற்கு உள்ளது என நல்லூர் பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். 

நல்லூர் பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களான இ. சிவகுமார் , வி. அனந்தன் மற்றும் சு. அனுஷா ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். 

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

நல்லூர் பிரதேச சபையில் கடந்த 18ஆம் திகதி நடைபெற்ற  மாதாந்த அமர்வின் போது, முன்கூட்டியே உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படாத விடயமான 'பயங்கரவாத தடைச்சட்டத்தை (PTA) நீக்க வேண்டும்' என்ற பிரேரணையை தவிசாளர் சபையில் திடீரென முன்வைத்தார். 

இது தொடர்பில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாத நிலையில், தவிசாளர் முன்கூட்டியே திட்டமிட்டு, ஊடகவியலாளர் என்ற போர்வையில் தனது கட்சி உறுப்பினர் ஒருவரையும் சபைக்கு அழைத்து வந்திருந்தமையானது ஒரு மலிவான அரசியல் நாடகம் என்பதை வெளிப்படுத்தியது.

பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் என்ற கருத்தை தவிசாளர் சபையில் முன்வைத்த போது, தேசிய மக்கள் சக்தி என்ற வகையில் எமது கட்சியின் உண்மையான நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு எமக்கு எழுந்தது.

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் எமது நிலைப்பாடு:

இந்தக் கொடிய சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்பதற்காக ஜே.வி.பி (JVP) / தேசிய மக்கள் சக்தி தொடர்ச்சியாகவும் கடுமையாகவும் போராடி வந்துள்ளது. 

கடந்த 1979 ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜெயவர்த்தன ஆட்சிக் காலத்தில், அரசுக்கு எதிரான மக்கள் போராட்டங்களை அடக்குவதற்காக ஜி.எல். பீரிஸ் அவர்களின் ஆலோசனையுடன் உருவாக்கப்பட்டதே இந்தச் சட்டம். இன்றுவரை பலராலும் நீடிக்கப்பட்டு வந்த இந்தச் சட்டத்தினால் எண்ணற்ற அப்பாவி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 

எனவே, இதனை முழுமையாக நீக்க வேண்டும் என்பதே எமது கட்சியின் உறுதியான நிலைப்பாடாகும்; அது நிச்சயம் இந்த அரசால் நீக்கப்படும்.

பழைய சட்டத்தை நீக்கும் அதேவேளை, நாட்டைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் அரசிற்கு உள்ளது. 

இதற்காக ஜே.ஆர். ஜெயவர்த்தனவைப் போலத் தன்னிச்சையான முடிவுகளை இந்த அரசு எடுக்கவில்லை. மாறாக, துறைசார் வல்லுநர்கள் குழுவொன்றால் தயாரிக்கப்பட்ட உத்தேச சட்ட வரைபொன்றை மட்டுமே முன்மொழிவாக வெளியிட்டுள்ளது.

இந்தச் புதிய சட்டம் தொடர்பில் குறைகளைக் கண்டறிவதற்கும், திருத்தங்களை முன்வைப்பதற்குமான போதிய கால அவகாசத்தை அரசு வழங்கி மக்களின் கருத்துக்களைக் கோரியிருந்தது. 

ஆனால், தவிசாளரோ அல்லது சபையின் ஏனைய உறுப்பினர்களோ எவ்வித ஆக்கபூர்வமான கருத்துக்களையும் உரிய நேரத்தில் முன்வைக்கவில்லை. சபையில் வைத்து, "இந்த உத்தேச சட்ட வரைபை முழுமையாக வாசித்தீர்களா?" என தவிசாளரிடம் நான் எழுப்பிய கேள்விக்கு, "இல்லை" என்றே அவர் பதிலளித்தார். 

ஏனைய உறுப்பினர்களிடம் கேட்டபோதும் அவர்களும் வாசிக்கவில்லை என்றே கூறினர். இதற்குப் பதிலளிக்க முடியாத சபையிலிருந்த சட்டத்தரணியான உறுப்பினர் ஒருவர், "அப்படிக் கேட்க முடியாது" எனத் தட்டிக் கழிக்கவே முற்பட்டார்.

புதிய சட்டமூலம் என்ன சொல்கிறது, அதில் உள்ள சரத்துகள் என்ன என்பதைப் பற்றி எவ்வித அடிப்படை அறிவும், வாசிப்பும் இன்றி, வெறுமனே அரசியல் இலாபத்திற்காக ஒரு பிரேரணையை நிறைவேற்றுவது முற்றிலும் தவறானது. இதனாலேயே குறித்த பிரேரணையை சபையில் எமது கட்சி எதிர்த்தது.

நாங்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு எதிரானவர்கள் அல்ல; மாறாக, எவ்வித வாசிப்புமின்றி பொறுப்பற்ற முறையில் கொண்டுவரப்பட்ட பிரேரணையையே எதிர்த்தோம். 

ஆனால், சபையில் நாம் முன்வைத்த இந்த நியாயமான வாதங்களை முழுமையாக இருட்டடிப்புச் செய்த சில ஊடகங்கள், "தேசிய மக்கள் சக்தி கடும் எதிர்ப்பு" எனத் திரிபுபடுத்தி, உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டுள்ளமை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

உண்மை நிலையினை மக்கள் மன்றத்திற்குத் தெளிவுபடுத்துவதற்காகவே இந்த ஊடக அறிக்கையை வெளியிடுகிறோம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

No comments