Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வலி. வடக்கில் சித்திரை புத்தாண்டுக்குள் பாதையை விடுவிக்க கோரும் மக்கள் - தனியார் காணிக்குள் தற்காலிக பாதை அமைக்க முற்படும் இராணுவம்


பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு செல்லும் வீதி இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் உள்ளமையால் , தற்காலிகமாக தனியார் காணிகள் ஊடாக ஆலயத்திற்குள் செல்லும் பாதையை நிரந்தர பாதையாக மாற்றி அமைக்கும் பணிகளை இராணுவத்தினர் முன்னெடுத்த நிலையில் , அதற்கு காணி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தமையை அடுத்து இராணுவத்தினர் தமது பணிகளை நிறுத்தியுள்ளனர். 

உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி பலாலியில் இருந்து மக்கள் வெளியேறி இருந்தனர். அதனை தொடர்ந்து அப்பகுதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்டது.

கடந்த 35 வருட காலத்திற்கு மேலாக அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள நிலையில் , கடந்த ஆண்டு ஜூன் மாதமளவில் குறித்த பகுதியில் உள்ள ஆலயத்திற்கு மாத்திரம் செல்வதற்கு என உயர் பாதுகாப்பு வலயத்தினுள் தனியார் காணிகள் மற்றும் வைரவர் ஆலய காணி ஆகியவற்றின் ஊடாக பிரத்தியோக பாதை அமைக்கப்பட்டு , மக்கள் ஆலயத்திற்கு மாத்திரம் சென்று வழிபாட்டு திரும்ப இராணுவத்தினர் அனுமதி வழங்கி இருந்தனர்.

குறித்த தற்காலிக பாதை ஊடாகவே ஆலயத்திற்கு மக்கள் சென்று வந்த நிலையில் , குறித்த பாதையை நிரந்தர பாதையாகும் நோக்குடன் இராணுவத்தினர் பாதையில் மேலதிகமாக மண் கொட்டி பாதை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். 

இதனை அறிந்த காணி உரிமையாளர்கள் அது தொடர்பில் தெல்லிப்பளை பிரதேச செயலகம் , வலி. வடக்கு பிரதேச சபை ஆகியவற்றுக்கு அறிவித்ததை அடுத்து அவர்களால் இராணுவத்தினரின் பாதை அமைக்கும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

ஆலயத்திற்கு செல்லும் நிரந்தர பாதை உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள போதிலும் , பாதையை அண்டிய பகுதிகளில் இராணுவ முகாம்கள் எதுவும் இல்லை எனவும் , பாதையை அண்மித்த பகுதியில் இராணுவத்தினரின் வாகன திருத்தகம் ஒன்றே காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

ஆலயத்திற்கு செல்லும் பிரத்தியோக பாதையை விடுவிப்பதனால் எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் ஏற்படாத நிலையில் , அந்த பாதையை விடுவிக்கும் நோக்கமின்றி , தனியார் காணிகள் ஊடாக செல்லும் தற்காலிக பாதையை நிரந்தர பாதையாக மாற்ற இராணுவத்தினர் முயற்சிப்பது , நிரந்தர பாதையை விடுவிக்கும் நோக்கம் இராணுவத்தினருக்கு இல்லையா என்ற அச்சம் தோன்றியுள்ளதாகவும் , அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

அதேவேளை சித்திரை புத்தாண்டு தினத்திற்கு முன்பாக வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலய பகுதிக்குள் உள்ள ஒரு தொகுதி காணியை விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கடற்தொழில் அமைச்சர் தெரிவித்துள்ள நிலையில் , ஆலயத்திற்கு செல்லும் பாதையை விடுவித்து , ஆலயத்தினையும் அதனை சூழவுள்ள பிரதேசங்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சித்தரை புத்தாண்டு தினத்தன்று ஆலயத்திற்கான நிரந்தர பாதை ஊடாக ஆலயத்திற்கு சுதந்திரமாக சென்று பொங்கல் பொங்கி வழிபட ஏதுவாக பாதையை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி மக்கள் கோரியுள்ளனர்.






No comments