மன்னாரின் உயிரியல் பல்வகை தன்மையையும் சமூகத்தில் பெண்களின் பங்களிப்பினையும் வெளிப்படுத்தும் வகையில் மன்னாரில் சமூக சுவர் ஓவியம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மன்னார் பொது நூலகத்தின் வெளிப்புறச் சுவரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய சமூக சுவரோவியம், கலை, அறிவியல் மற்றும் சமூகத்தின் குரல்களை ஒன்றிணைத்து, இந்தத் தீவின் வளமான உயிரியல் பல்வகைமையையும் காலநிலை பேரிடர்களுக்கு எதிராக பெண்களின் தலைமைத்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது.
இந்த சுவரோவியத்தில் மன்னார்த் தீவின் தனித்துவமான இயற்கை அமைப்புக்கள் வரையப்பட்டுள்ளதோடு, இடம்பெயரும் பறவைகள், டியூகங் (Dugong), பவளப் பாறைகள், கடற்தாவரங்கள், புல்வெளிகள் போன்றவையும் வரையப்பட்டுள்ளன. இவை கடல் உயிரினங்களுக்கு வாழிடமாகவும் கடற்கரை மக்களின் வாழ்வாதாரத்தை தாங்கும் அமைப்புகளாகவும் உள்ளன.
மன்னார் சமூகத்தின் கூட்டு முயற்சியால் உருவான இந்தக் கலைப்பணியானது , மன்னார் மக்களின் அன்றாட வாழ்வியலையும் கடலுடனான மக்களின் ஆழமான உறவை வெளிப்படுத்துகிறது.
உள்ளூர் பெண்கள் இளைஞர் குழுக்களின் முயற்சியில் உருவான இந்த சுவர் ஓவியம் பற்றி, கலைஞர் விக்கி ஷாஜகான் தெரிவிக்கையில்,
மன்னாரின் சூழலியல் அமைப்புகள் மிகவும் அழகானவை, ஆனால் அதே நேரத்தில் மிகவும் நெகிழ்வானவையும் ஆகும். இந்த சுவரோவியத்தின் மூலம் இங்குள்ள மக்கள் கடல்மீது எவ்வளவு ஆழமாக சார்ந்திருக்கிறார்கள் என்பதையும் உயிரியல் பல்வகைமையைப் பாதுகாப்பது சமூகங்களைக் காக்கும் செயலாகும் என்பதையும் சொல்ல விரும்பினோம்,” எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கிரீன் பீஸ் நிறுவனத்தை சேர்ந்த பொறுப்பதிகாரிகளான அவினாஷ்,
செரிக்கா, ஆலோசகர் ஷகீதா பாலசந்திரன் மற்றும் நிறுவனத்தின் தன்னார்வ தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்
மன்னாரில் இந்த நிகழ்வினை Happy voice hub தன்னார்வ இளையோர் அமைப்பின் ஜெருசன் டிலக்சன் விஜிதன் மற்றும் இவ்வமைப்பின் தன்னார்வ தொண்டர்கள் இணைந்து செயற்படுத்தி இருந்தனர்..
இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகள் மற்றும் ஆதரவினை மன்னார் மாவட்ட நகர சபை முதல்வர் மற்றும் பிரதேச சபை செயலாளர் வழங்கியிருந்ததோடு மன்னார் மாவட்ட செயலாளரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்
மன்னார் மாவட்டத்தில் வரையப்பட்ட மிகப்பெரிய சுவரொவியம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
(ரோகினி நிஷாந்தன் - மன்னார்)










No comments