யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் பாரம்பரிய 'ஆட்டக்காரி' நெல்லினத்தை 'பிராந்திய நெல்லினமாக' உடனடியாகப் பரிந்துரைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வடமாகாண விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்றைய தினம் புதன்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. அதன் போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
குறித்த கலந்துரையாடலின் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் பாரம்பரிய 'ஆட்டக்காரி' நெல்லினத்துக்கு விவசாயத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ பரிந்துரை இதுவரை இல்லாத காரணத்தால், அதற்கான நியாயமான நிர்ணய விலையைத் தீர்மானிப்பதிலும், விவசாயக் காப்புறுதியைப் பெற்றுக்கொள்வதிலும் விவசாயிகள் சிக்கல்களை எதிர்கொண்டு வந்தனர்.
இந்த நீண்டகாலப் பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக ஆட்டக்காரியை ஒரு 'பிராந்திய நெல்லினமாக' உடனடியாகப் பரிந்துரைப்பதற்கான சாதகமான நடவடிக்கைகளை எடுப்பதாகப் பணிப்பாளர் நாயகம் உறுதியளித்தார்.
அதேநேரம் வடக்கு மாகாணத்தின் ஊடான ஏற்றுமதிகளை ஊக்குவிப்பதற்கும், நோய்த்தாக்கங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் பலாலி சர்வதேச விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றை மையப்படுத்திய 'தாவர தனிமைப்படுத்தல் அலுவலகத்தை' முழுமையாக இயங்கச் செய்வது தொடர்பில் ஆராயப்பட்டது.
வெளிநாடுகளிலிருந்து (குறிப்பாக இந்தியாவிலிருந்து) கொண்டுவரப்படும் வாழைக் கன்றுகள் ஊடாக 'பனாமா' போன்ற கொடிய நோய்கள் பரவும் அபாயம் உள்ளதால், சுங்க அதிகாரிகளுடன் இணைந்து கடுமையான கண்காணிப்புகளை மேற்கொள்ளவும், ஏற்றுமதியாளர்களுக்கு இலகுவாகச் சான்றிதழ்களை வழங்குவதற்குமான வசதிகளை மேம்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் , விதைச் சான்றிதழ்களைப் பெறுவதற்காக வடக்கிலிருந்து தெற்குக்கு விதைகளை அனுப்பிவிட்டு மாதக்கணக்கில் காத்திருக்கும் நிலையை மாற்றுவதற்காக, வடக்கு மாகாணத்துக்குள்ளேயே 'விதைப் பரிசோதனைச் சிறிய ஆய்வுகூடங்களை' விரைவாக நிறுவுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், விவசாயத்தில் இளைஞர்களை ஈர்ப்பதற்காகப் பரந்தன் மற்றும் வவுனியா விவசாயக் கல்லூரிகளில் டிப்ளோமா கற்கை நெறிகளை விரிவுபடுத்துதல், இளைஞர்களுக்கான 4 சதவீத குறைந்த வட்டியிலான கடன் திட்டங்களை இலகுபடுத்துதல் மற்றும் பயன்படுத்தப்படாத அரச காணிகளை இளைஞர்களின் விவசாய முயற்சிகளுக்கு வழங்குதல் தொடர்பிலும் கொள்கை ரீதியாக ஆராயப்பட்டது.
அத்துடன், அனுமதியற்ற மற்றும் காலாவதியான விவசாய இரசாயனங்கள் சந்தையில் விற்கப்படுவதைக் கடுமையாகக் கட்டுப்படுத்தவும், அவ்வாறு ஈடுபடும் வர்த்தக நிலையங்களின் பதிவுகளை உடனடியாக ரத்துச் செய்யுமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டது.




.jpeg)


No comments