Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் தொடர்பில் எச்சரிக்கும் விசேட வைத்திய நிபுணர்


வெப்பமான வானிலைக்கு மத்தியில் நடத்தப்படும் பாடசாலை விளையாட்டு நிகழ்வுகளின் போது மிகவும் அவதானத்துடன் செயற்படுவது அவசியம் என கொழும்பு, சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சுவாச நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார். 

வெப்பமான வானிலையினால் ஏற்படும் சுகாதார அபாயங்களைக் குறைப்பது எப்படி மற்றும் விளையாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் போது கவனிக்க வேண்டிய விடயங்கள் குறித்து பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தும் நோக்கில், சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனைக் குறிப்பிட்டார். 

இதன்போது கருத்துத் தெரிவித்த வைத்திய நிபுணர், 

பாடசாலை விளையாட்டு நடவடிக்கைகளின் போது இந்த நிலைமையைக் கருத்திற் கொண்டு விளையாட்டுப் போட்டிகளைக் குறைத்தல், மாணவர்களுக்குத் தொடர்ச்சியான ஓய்வு வழங்குதல், பிள்ளைகளைக் குளிர்ச்சியான இடங்களில் தங்கவைத்தல் மற்றும் நீர் அல்லது உப்பு கலந்த பானங்களை வழங்குதல் மிகவும் முக்கியமானது எனத் தெரிவித்தார். 

தற்போது நிலவும் இந்த நிலைமையின் பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளவும், சூழ்நிலையை அடையாளம் கண்டறிந்து தேவையான சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளவும் முன்வருவது மிகவும் அவசியம். 

குறிப்பாகப் பாடசாலைகளில் காலை மற்றும் பகல் வேளைகளிலேயே விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. 

கடும் வெயில் நிலவும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையான காலப்பகுதியில் இவ்வாறான செயற்பாடுகளை முடிந்தவரை குறைத்துக்கொள்வதும், பிள்ளைகளுக்கு அடிக்கடி ஓய்வு வழங்குவதும் முக்கியமாகும். 

பிள்ளைகள் தொடர்ச்சியாக விளையாட விரும்புவார்கள், ஆனால் அதனை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது; இடைவேளை அவசியம். விளையாட்டிற்கு இடையே அவர்களுக்கு ஓய்வு வழங்கி, நிழலான அல்லது குளிர்ச்சியான இடங்களில் அவர்களைத் தங்கவைப்பதோடு அதிகளவு நீர் மற்றும் ஆரோக்கியமான பானங்களை வழங்க வேண்டும். 

இதனைச் செய்யத் தவறினால் உடல் வெப்பம் அதிகரித்து மயக்கம், சோர்வு போன்ற சிக்கல்கள் ஏற்படலாம். அத்துடன் தசைப்பிடிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. 

இந்த அறிகுறிகளைக் கண்டுகொள்ளாமல் விட்டால், உடல் வெப்பம் மேலும் அதிகரித்து 'வெப்ப அதிர்ச்சி' (Heat Stroke) போன்ற உயிருக்கு ஆபத்தான சிக்கலான நிலைக்கு இட்டுச் செல்லும். 

ஒரு பிள்ளைக்கு மயக்கம், சோர்வு, தலைச்சுற்றல் அல்லது குழப்பமான நிலை ஏற்பட்டால், உடனடியாக அவரை வெயில் உள்ள இடத்திலிருந்து அகற்றி குளிர்ச்சியான இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். 

நீர் அருந்த முடியுமானால் அதனை வழங்கவும். நிலைமை தொடருமானால் தாமதிக்காது அருகிலுள்ள அரச வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வது அவசியமாகும் எனத் தெரிவித்தார்.

No comments