Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

குற்றவாளியாக காணப்பட்ட பெண் சட்டத்தரணி - சட்டத்தரணி பதவி நீக்கி ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை


சட்டத்தரணிகளின் தொழில்முறை ஒழுக்கக்கோவைகளை மீறிய குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட கெக்கிராவ பகுதியைச் சேர்ந்த பெண் சட்டத்தரணி ஒருவரை, சட்டத்தரணி பதவியிலிருந்து நீக்கி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் வழங்கப்பட்ட தடை உத்தரவை மீறியமைக்காக, நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டிலும் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டார். 

அவருக்கு ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அதனை ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

அத்துடன் 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன், அதனைச் செலுத்தத் தவறினால் மேலதிகமாக ஆறு மாத சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நீதியரசர்களான அர்ஜுன ஒபேசேகர மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரின் இணக்கப்பாட்டுடன், உயர் நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட இந்தத் தீர்ப்பை அறிவித்தார். 

2023 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் திகதி, கெக்கிராவ நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்குக் கோப்பிலிருந்து இரண்டு பக்கங்களை அகற்றி, அவற்றை வாயால் கடித்து சேதப்படுத்தியதன் மூலம் சட்டத்தரணிகளின் ஒழுக்கக்கோவைக்கு மாறாகச் செயற்பட்டதாக இவருக்கு எதிராக சட்டமா அதிபரால் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. 

இந்த விசாரணைகள் நிறைவடையும் வரை அவருக்கு சட்டத்தரணியாகப் பணியாற்ற இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருந்தது. 

இருப்பினும், அந்தத் தடையை மீறி அவர் மீண்டும் சட்டத் தொழிலில் ஈடுபட்டமைக்காக நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது. ஆரம்பத்தில் தாம் குற்றமற்றவர் எனத் தெரிவித்த அவர், பின்னர் இரு குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டார். 

இதனைத் தொடர்ந்து தீர்ப்பளித்த நீதியரசர்கள், இவரின் செயல் சட்டத்தரணிகளின் ஒழுக்க நெறிமுறைகளை பாரியளவில் மீறுவதாக அமைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டினர். 

அதற்கமைய, அவரது பெயரை சட்டத்தரணிகளின் பெயர்ப் பட்டியலிலிருந்து நீக்குமாறு உயர் நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவிட்ட நீதியரசர்கள், இத்தீர்மானத்தை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் கெக்கிராவ மாவட்ட நீதிபதி ஆகியோருக்கு அறிவிக்குமாறும் பணித்தனர். 

மேலும், நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டுக்காக ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டதுடன், கைரேகை அடையாளங்களை வழங்குவதற்காக பொலிஸ் குற்றப் பதிவு மற்றும் கைரேகைப் பிரிவில் முன்னிலையாகுமாறும் அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments