Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ். பல்கலை கறுப்பு கொடி விவகாரம் - 3 மாணவர்களை விசாரணைக்கு அழைத்துள்ள பொலிஸ்

சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில்  தேசியக் கொடி இறக்கப்பட்டு, கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்கள் மூவருக்கு யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர், கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் உள்ளிட்ட மூன்று மாணவர்களை விசாரணைக்கு வருமாறு பல்கலைக்கழக பதிவாளர் ஊடாக எழுத்து மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதம் 13ஆம் திகதி திகதியிடப்பட்டு , 16ஆம் திகதியான நேற்றைய தினம் காலை 09.30 மணிக்கு விசாரணைக்கு சமூகமளிக்க வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், கடிதம் 17ஆம் திகதியான இன்றைய தினமே பதிவாளரால் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 

பதிவாளர் ஊடாக அனுப்பட்ட கடிதத்திற்கு தாம் விசாரணைக்கு செல்ல வேண்டுமா என்பது தொடர்பிலும் 13ஆம் திகதி திகதியிடப்பட்டு 16ஆம் திகதிக்கு விசாரணைக்கு வருமாறு கோரப்பட்ட கடிதம் 17ஆம் திகதியே பதிவாளரால் கையளிக்கப்பட்டமையால் , விசாரணைக்கு செல்வது தொடர்பில் மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

பின்னணி.

சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை இறக்கி கறுப்பு கொடியேற்றியமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கடந்த பெப்ரவரி மாதம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு பணித்திருந்தது. 

அதனைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்தின் இன நல்லிணக்கப் பிரிவுக்குப் பொறுப்பான பேராசிரியர், மாணவர் ஒழுக்காற்று அதிகாரி மற்றும் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரைக் கொண்ட குழுவொன்று விசாரணைகளை முன்னெடுத்தது.

குறித்த விசாரணை அறிக்கையானது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.  

விசாரணைகளின் அடிப்படையில் கறுப்பு கொடியேற்றிய சம்பவத்துடன் நேரடியாகத் தொடர்புடையதாக 2 மாணவிகள் உள்ளிட்ட  30 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மாணவர்களிடம் பல்கலைக்கழக மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, சிறுபான்மைத் தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு உரிய மதிப்பு வழங்கப்படாத வரை இலங்கையின் சுதந்திரதினம் தமிழர்களுக்கு உகந்த நாளல்ல

என்பதை வெளிப்படுத்தவே இந்தச்செயலில் ஈடுபட்டதாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், கடந்த 11ஆம் திகதி   பல்கலைக்கழகத்தினுள் தமது வாகனத்தில் சென்று துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோரிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணைகளை முன்னெடுத்து வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளனர். 

பொலிஸார் வாகனத்துடன் பல்கலைக்கழக வளாகத்தினுள் சென்று , பல்கலைக்கழகத்தினுள் வைத்து துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோரிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணைகளை மேற்கொண்டு வாக்கு மூலங்களை பெற்றுக்கொண்டமை தொடர்பில் மாணவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் கொடியேற்றப்பட்ட வேளை பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்டவர்களிடமும் , அடையாளம் காணப்பட்ட சில மாணவர்களிடமும் விசாரணைகளை முன்னெடுத்து , வாக்கு மூலங்களை பதிவு செய்ய குற்றத்தடுப்பு பிரிவினர் நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் , மாணவர் ஒன்றிய தலைவர்கள் உள்ளிட்ட மூவரிடம் வாக்கு மூலங்களை பதிவு செய்ய அவர்களை விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 



No comments