இரத்தினபுரி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர (சொக்கா மல்லி), அனுமதிப்பத்திரம் இல்லாத கைத்துப்பாக்கியுடன் நுவரெலியா பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடும்ப உறவினர்களுடன் நுவரெலியாவுக்கு சென்றிருந்த பிரேமலால் ஜயசேகரவுக்கும், அவிசாவளையிலிருந்து அங்கு சுற்றுலா வந்திருந்த ஒரு குழுவினருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது, பிரேமலால் ஜயசேகர தனது கைத்துப்பாக்கியைக் காட்டி அந்தத் தரப்பினரை அச்சுறுத்தியதாக நுவரெலியா பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி ரவீந்திர பிரேமலால் உள்ளிட்ட அதிகாரிகள் அவரைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.
அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கைத்துப்பாக்கிக்காக பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரம் 2025ஆம் ஆண்டுடன் காலாவதியாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
சந்தேகநபர் நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
அதேவேளை 2015 ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றின் போது நபரொருவரை சுட்டுக் கொலை செய்தமை உள்ளிட்ட குற்றங்களுங்காக பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31ஆம் திகதி மரண தண்டனை விதித்து மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மரண தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்ட நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவரையும் குற்றமற்றவர்கள் என விடுவித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.









No comments