கடலட்டை பண்ணைகள் விஸ்தரிக்கப்படுகின்ற போது, அவற்றின் உரிமையாளர்களாகவும் பயனாளர்களாகவும் அந்ததப் பிரதேசத்தினை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
"கடலட்டை பண்ணைகளை மேலும் விஸ்தரிப்பது தொடர்பான கலந்துரையாடல் கடந்த சில தினங்களுக்கு முன்னர், கடற்றொழில் அமைச்சர் மற்றும் வடக்கு ஆளுநர் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
எமது பிரதேசத்திற்கு அந்நிய செலாணியை பெற்றுக் கொள்ளும் வகையில் எமது செயலாளர் நாயகத்தின் தீர்க்க தரிசனத்துடன், விஸ்தரிக்கப்பட்ட கடலட்டை உற்பத்தி பாரிய வெற்றி பெற்றிருந்தது.
இந்நிலையிலேயே, தற்போயை அரசாங்கமும் இந்த விடயத்தில் அவதானம் செலுத்தியுள்ளது.
இவ்வாறான விடயங்கள் முன்னெடுக்கப்படுகின்றபோது, பல்வேறு பரிமாணங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இல்லாதுவிடின், எமது மக்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது.
குறிப்பாக முதலீட்டாளர்கள் என்ற அடிப்படையில், தென்னிலங்கையை சேர்ந்தவர்கள் போன்ற வெளியார் உள்வாங்கப்பட்டால், வருமானத்தின் பெரும் பகுதி எடுத்துச் செல்லப்பட்டு விடும் எமது மக்களுக்கு போதிய பலன் கிடைக்காது.
அதேபோன்று, பூகோள அரசியல் ஆதிக்கத்திற்கும் பயன்படுத்தக் கூடிய அபாயம் இருகிக்கின்றது.
எனவே, தற்போயை முயற்சிகளிலும் இந்தப் பிரதேசத்தினை சேர்ந்தவர்களே பயன்படுத்தப்பட வேண்டும்.
எதிர்வரும் காலங்களில், முதலீட்டாளர்கள் என்ற அடிப்படையிலோ, ஏற்றுமதியளார்கள் என்ற போர்வையிலோ, எங்களுடைய வளங்களும் எங்களுடைய வருமானங்களும் ஏற்றுமதி செய்யப்படுகின்ற சூழல் உருவாகக்கூடாது என்பதே எம்முடைய எதிர்பார்ப்பாக இருக்கின்றது.
எமது கட்சியின் இந்த நிலைப்பாட்டை பிரதேசவாதமாகவோ இனவாதமாகவோ, தேசியவாதமாகவோ யாரும் கருதக் கூடாது. கடந்த பல தசாப்தங்களாக அழிவுகளையும் அவலங்களையும் சுமந்து, ஏனையவர்களோடு ஒப்பிடுகின்றபோது பின்தள்ளி இருக்கின்ற எமது மக்களின் எதிர்காலம் சுபீட்சமடைய வேண்டும்.
அதற்கு எமது பிரதேசங்கிளில் இருக்கின்ற வளங்களை உச்சபட்சம் நாங்களே பயன்படுத்த வேண்டும் என்ற அக்கறையின் வெளிப்பாடாகவே அனைவரும் அணுக வேண்டும் என தெரிவித்தார்.







No comments