புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் மரண தண்டனை கைதி யாழ்ப்பாண சிறைச்சாலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை தனது உயிரை மாய்த்துள்ளார்.
புங்குடுதீவு பகுதியை சேர்ந்த பூபாலசிங்கம் ஜெயக்குமார் (வயது 46) என்பவரே உயிரிழந்துள்ளார்.
புங்குடுதீவு பகுதியை சேர்ந்த பாடசாலை மாணவி கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி பாடசாலைக்கு செல்லும் வேளையில் கடத்தப்பட்டு , கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
குறித்த சம்பவம் முழு நாட்டையும் உலுக்கி இருந்த நிலையில் , விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சகோதரர்கள் மற்றுமொரு குடும்பத்தை சேர்ந்த இரு சகோதரர்கள் உள்ளிட்ட 09 பேரை கைது செய்தனர்.
ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்ற சுருக்கமுறையற்ற நீதிமன்ற விசாரணைகளை தொடர்ந்து வழக்கேடுகள் சட்டமா அதிபர் திணைக்களத்தில் பாரப்படுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் வடமாகணத்தில் முதலாவது " ரயலட் பார் " தீர்ப்பாய முறைமையிலான நீதிமன்ற அமர்வு அப்போதைய மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் வழக்கு விசாரணைகள் நடைபெற்றது.
அதன் போது 09 எதிரிகளுக்கு எதிராக 41 குற்ற சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.
" ரயலட் பார் " தீர்ப்பாய முறைமையிலான விசாரணைகள் நடைபெற்று தீர்ப்பாயம் கடந்த 2017ஆம் ஆண்டு செப்டெம்பர் 27ஆம் திகதி இருவர் மீதான குற்றச்சாட்டுக்களை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க முடியாதமையால் , இருவர் விடுதலை செய்யப்பட்டதுடன் , ஏனைய ஏழு பேருக்கும் மரண தண்டனை விதித்தும் , 30 வருட சிறை தண்டனையும் விதித்தும் தீர்ப்பளித்தது. குறித்த தீர்ப்பினை எதிர்த்து 07 பேரும் உச்ச நீதிமன்றில் மேன் முறையீடு செய்ததை அடுத்து, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் , இருவர் மீதான தண்டனையை நீக்கி , ஏனையவர்கள் மீதான தண்டனையை கடந்த 06ஆம் திகதி உறுதி செய்தது.
இந்நிலையில் , தண்டனை உறுதி செய்யப்பட்டவர்களின் தீர்ப்பினை மீளவும் உறுதி செய்வதற்காக குறித்த வழக்கு யாழ் . மேல் நீதிமன்றில் இன்றைய தினம் திங்கட்கிழமை அழைக்கப்பட்டது.
அதற்காக நீதிமன்றில் குற்றவாளிகளை முற்படுத்த ஏதுவாக நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை குற்றவாளிகளை யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு மாற்றி இருந்தனர்.
இந்நிலையில் இன்றைய தினம் நீதிமன்றுக்கு அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை யாழ்ப்பாண சிறைச்சாலை அதிகாரிகள் முன்னெடுத்து இருந்த நிலையில் , குளிப்பதற்காக சென்ற ஜெயக்குமார் , குளியலிடத்தில் தனது உயிரை மாய்த்துள்ளார்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் , யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை உயிரை மாய்த்துக்கொண்ட ஜெயக்குமாரின் சகோதரர்கள் இருவரும் மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் , ஒருவர் மீதான குற்றச்சாட்டுக்களை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க முடியாது போனமையால் " ரயலட் பார் " தீர்ப்பாயம் வழக்கில் இருந்து விடுவித்து இருந்தது.
ஜெயக்குமாரும் மற்றைய சகோதரனும் மரண தண்டனையை அனுபவித்து வந்த நிலையில் , சிறையில் நோய் வாய்ப்பட்டு ஒருவர் உயிரிழந்த நிலையில் , தற்போது மற்றையவரும் தனது உயிரை மாய்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது .









No comments