Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பருத்தித்துறை நகர சபை தவிசாளர் உள்ளிட்டோருக்கு எதிரான வட மாகாண ஆளுநரின் விசாரணைக்கு இடைக்காலத் தடை!


வடக்கு மாகாண ஆளுநரால் பருத்தித்துறை நகரசபைத் தவிசாளர் மற்றும் உறுப்பினருக்கு எதிராக முன்னெடுக்கப்படவிருந்த விசாரணை நடவடிக்கைகளுக்கு வடக்கு மாகாண மேல் நீதிமன்றம்  இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. 

பருத்தித்துறை நகரசபைத் தவிசாளர் டக்ளஸ் டி போல் மற்றும் நகரசபை உறுப்பினர் சிவலிங்கம் பொன்னம்பலம் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்றைய தினம் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பின்னரே நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.

பருத்தித்துறை நகரசபைக்குட்பட்ட மரக்கறிச் சந்தையைப் பழைய இடத்திற்கு மாற்றுவதற்குச் சபை மேற்கொண்ட தீர்மானம் உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு, தவிசாளர் மற்றும் உறுப்பினருக்கு எதிராக விசாரணை நடத்த முன்னாள் மாவட்ட நீதிபதி க. அரியநாயகம் தலைமையில் விசாரணைக் குழு ஒன்று கடந்த மார்ச் மாதம் 12 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் நியமிக்கப்பட்டிருந்தது. 

இந்த விசாரணைக் குழுவின் முன்னிலையில்  முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு எதிராக மனுதாரர்கள் மேல் நீதிமன்றத்தை நாடியிருந்தனர்.

மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றத்தில் முக்கிய வாதங்களை முன்வைத்தார். 

நகரசபையின் சனநாயக ரீதியான தீர்மானங்கள் குறித்து விசாரணை நடத்த முடியாது என்றும், இது நகரசபைக் கட்டளைச் சட்டத்தின் கீழ் குற்றமாகாது என்றும் வாதிட்டார்.

மேலும், ஏப்ரல் 08 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி குறித்த வர்த்தமானி அறிவித்தல் உத்தியோகபூர்வமாக வெளியாவதற்கு முன்னரே அதனைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கருத்துத் தெரிவித்திருந்தமையைச் சுட்டிக்காட்டிய சட்டத்தரணி, இந்த விசாரணை நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், தவிசாளரைப் பதவியிலிருந்து நீக்கும் முயற்சியாகும் என்றும் வாதிட்டார்.

அகில இலங்கைத் தமிழ் காங்கிரசின்  ஆளுகைக்குட்பட்ட பருத்தித்துறை மற்றும் சாவகச்சேரி நகரசபைகளை இலக்கு வைத்து இவ்வாறான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

சட்டத்தரணியின் வாதங்களை ஏற்றுக்கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதி அலெக்ஸ் ராஜா, இந்த வழக்கு விசாரணை நிறைவடையும் வரை தவிசாளர் மற்றும் உறுப்பினருக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுக்கக் கூடாதென இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.

No comments