யாழ்ப்பாணத்தில் அருச்சுனா எம்.பி யுடன் முரண்பட்ட பெண்ணொருவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ள மல்லாகம் நீதவான் நீதிமன்று , குறித்த பெண்ணின் குழந்தையை அப்பெண்ணே வைத்திருக்கவும் மன்று அனுமதித்துள்ளது.
பெரியவிளான் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினருக்கும் , மற்றுமொரு தரப்பினருக்கும் இடையில் காணி பிணக்கு ஒன்று நிலவி வரும் நிலையில் , நேற்றைய தினம் சனிக்கிழமை குறித்த காணிக்குள் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் மற்றைய தரப்பினரும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
அந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் தனது கைத்துப்பாக்கியை காட்டி அவர்களை மிரட்டியமை தொடர்பிலான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அவ்வாறான நிலையில் , தனது காணிக்குள் அத்துமீறி நுழைந்து , தன்னை அச்சுறுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் , இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார் .
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் நாடாளுமன்ற உறுப்பினருடன் முரண்பட்டவர்களில் பெண்ணொருவரை கைது செய்து மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.
அதனை அடுத்து குறித்த பெண்ணை எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது .
அதன்போது குறித்த பெண் ஒரு வயது குழந்தைக்கு தாய் எனவும் , குழந்தைக்கு பாலூட்ட வேண்டிய தேவை உள்ளதாகவும் மன்றுக்கு சுட்டிக்காட்டிய போது , குழந்தையை தாயுடன் இருக்க மன்று அனுமதித்தது.








No comments