Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

'மாதவம்' சிகிச்சை நிலையத்தை ஒரு உத்தியோகபூர்வ நிறுவனமாக அங்கீகரிக்க தீர்மானம்


வடக்கு மாகாணத்தில் மனநலம் மற்றும் நரம்பியல் குறைபாடுகள் தொடர்பான சுகாதாரச் சேவைகளைத் தடையின்றி வழங்குவதற்கு மாகாண நிர்வாகம் முன்னுரிமை அளித்துச் செயற்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்  தெரிவித்துள்ளார். 

வடக்கு மாகாணத்தில் உள்ள ஒட்டிசம் (Autism) மற்றும் நரம்பியல் வளர்ச்சிக் குறைபாடுகள் (Neurodevelopmental Disorders) உள்ள குழந்தைகளுக்கான 'மாதவம்' சிகிச்சை நிலையத்தை நிரந்தர உத்தியோகபூர்வமான கட்டமைப்புக்குள் உள்ளீர்ப்பது மற்றும் அதன் எதிர்கால உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலின்போதே ஆளுநர் அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில்,

தற்போது வாடகைக் கட்டடத்தில் இயங்கி வரும் 'மாதவம்' சிகிச்சை நிலையத்தை ஒரு உத்தியோகபூர்வ நிறுவனமாக அங்கீகரித்து, அதனை நிர்வகிப்பதற்கு உரிய முகாமைத்துவக் குழுவொன்றை நியமிக்க இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இது மத்திய சுகாதார அமைச்சு, மாகாண சுகாதார அமைச்சு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆகியவற்றின் கூட்டு ஒருங்கிணைப்பில் செயற்படவுள்ளது. 

அத்துடன், புதிய சிகிச்சை நிலையத்துக்காகக் கைதடியில் அரச காணி உத்தியோகபூர்வமாகச் சுகாதாரத் திணைக்களத்துக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், இதற்கெனத் துறைசார் நிபுணர்களால் தயாரிக்கப்பட்ட நவீன கட்டட வரைபடங்கள் மற்றும் நிதி ஏற்பாடுகள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.

தேசியக் கொள்கைக்கு அமைவாக, வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் தலா ஒரு சிகிச்சை நிலையத்தை அமைப்பதற்கான திட்ட முன்மொழிவுகள் மற்றும் அதற்கான ஆளணி அனுமதிகளை முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திடம் இருந்து பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

மேலும், ஒட்டிசம் குறைபாட்டுக்கு மாத்திரமன்றி, மூளை வளர்ச்சி தாமதம், அறிவுசார் குறைபாடுகள், மூளை முடக்குவாதம் மற்றும் ஏனைய நரம்பியல் வளர்ச்சிக் குறைபாடுகளுக்கும் இந்த நிலையத்தினூடாக முழுமையான சிகிச்சைகளை வழங்குவது தொடர்பிலும் உரிய கவனம் செலுத்தப்பட்டது.

உளவள மற்றும் நரம்பியல் சுகாதாரத் துறையில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினூடாகப் பேச்சுச் சிகிச்சை மற்றும் தொழில்சார் சிகிச்சை போன்ற இணைந்த சுகாதார விஞ்ஞான கற்கைநெறிகளை ஆரம்பித்து நிபுணர்களை உருவாக்குவது குறித்தும் இக்கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது. 

மேலும், மாகாண மற்றும் மத்திய சுகாதார அமைச்சுகளின் நிதியொதுக்கீடுகளுக்கு அப்பால், வெளிவாரியான கொடையாளர்களின் உதவிகளைச் சட்டபூர்வமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஊடாகப் பெற்றுக்கொள்வதற்கான முறையான வழிமுறைகளை ஏற்படுத்துவது தொடர்பிலும் ஆராயப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில், வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர், மாகாண சுகாதாரப் பணிப்பாளர், மாகாண கல்விப் பணிப்பாளர், யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் துறைசார் மருத்துவ நிபுணர்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.

No comments