எமது காணிகளை அளவீடு செய்வது தொடர்பில் கடற்தொழில் அமைச்சர் நடாத்திய ஊடக சந்திப்பில் நாமும் கலந்து கொண்டு அமைச்சருக்கு முன்னால் எமது நிலைப்பாடுகளை ஊடகங்களுக்கு தெரிவிக்க விருப்பம் தெரிவித்த போது எமக்கு அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்யும் பணிகள் நாளைய தினம் வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் ,காணிகளை அளவீடு செய்வதற்கு சம்மதிப்பதா ? இல்லையா ? என்பதனை தீர்மானிப்பது தொடர்பில் காணி உரிமையாளர்களால் யாழில். நேற்றைய தினம் புதன்கிழமை கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யபப்ட்டது.
குறித்த கலந்துரையாடலின் ஆரம்பத்தில் காணி உரிமையாளர்கள் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தனர்.
மேலும் தெரிவிக்கையில்,
காணி உறுதி உள்ளவர்களின் காணிகளை தான் அளவீடு செய்ய போகிறார்கள். காணி உறுதியில்லாதவர்களின் காணிகள் தொடர்பான நிலைப்பாடு என்ன என்பது தொடர்பிலோ , அதற்கான தீர்வு தொடர்பிலோ எதுவும் எமக்கு அறிய தரப்படவில்லை.
விகாரை அமைந்துள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் கொழும்பில் பெப்ரவரி 17 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் தான் எமது 17 பேரின் காணி உறுதிகளும் உண்மையானவை என உறுதி செய்துள்ளார்கள். அதன் பின்னர் அந்த காணிகளுக்கான வரைபடங்களை கீறுவதற்காக காணிகளை அளவீடு செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அது தொடர்பில் காணி உரிமையாளர்கள் எங்களுக்கு எதுவும் தெரியப்படுத்தாமல் , சுமார் 2 மாதங்களின் பின்னர் கடந்த 11ஆம் திகதி சனிக்கிழமை எம்மை மாவட்ட செயலகத்திற்கு அழைத்து காணிகளை அளவீடு செய்ய போகிறோம். அதற்கு உரிமையாளர்கள் சம்மதிக்க வேண்டும் என சொன்னார்கள்.
அதில் எங்களுக்கு பல சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன. காணி விடுவிப்பு தொடர்பிலான கூட்டம் என இதுவரை மூன்று கூட்டங்கள் கொழும்பில் நடைபெற்றுள்ளது. விகாராதிபதியை கூட்டத்திற்கு அழைத்து செல்வார்கள். எமக்கு கூட்டம் தொடர்பில் எதனையும் அறிவிக்க மாட்டார்கள். கூட்டத்தில் என்ன கதைக்கப்பட்டது என்று யாரும் எமக்கு கூற மாட்டார்கள். ஊடகங்களுக்கும் அவை தொடர்பில் எதனையும் கூற மாட்டார்கள். கூட்ட அறிக்கைகளை கூட நாம் கேட்டு எமக்கு அதனை தந்தது இல்லை.
காணிகளை அளவீடு செய்ய வேண்டும் என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட விடயத்தை இரு மாதங்களின் பின்னர் எமக்கு குறுகிய கால இடைவெளியில் அழைப்பு தந்து , கூறி காணியை அளவீடு செய்ய சம்மதம் கோருகின்றனர். அதற்கு சம்மதிப்பதா இல்லையா என்பது தொடர்பில் நாம் மற்றவர்களுடன் கலந்துரையாடி ஒரு தீர்வினை பெற எமக்கு கால அவகாசம் தர கூடாது என்பது போன்றே செயற்பட்டுள்ளனர்.
காணி அளவீட்டு பணிகள் காணி விடுவிப்புக்காக மட்டுமே என்பதை உறுதி அளிக்க வேண்டும் என கோரினோம். அப்படி தர முடியாது என மாவட்ட செயலர் கூறினார். சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் காணிகளை விடுவிப்பதற்காக தான் காணி அளவீடுகளை மேற்கொள்ளவுள்ளோம் என கூறியதால் , அந்த கூட்டத்தின் கூட்ட அறிக்கை தர சொல்லி கேட்டோம். அதனை அவர்கள் தரவில்லை.
சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் கடற்தொழில் அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது நாமும் அந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு , அமைச்சர் ஊடகங்களுக்கு கூறும் கருத்துக்களை நேரில் செவிமடுக்க வேண்டும் எனவும் , அதே ஊடக சந்திப்பில் அமைச்சர் மாவட்ட செயலர் முன்பாக நாமும் எமது நிலைப்பாட்டை ஊடகங்கள் வாயிலாக தெரிவிக்க வேண்டும் என கோரினோம்.
ஊடக சந்திப்பில் காணி உரிமையாளர்கள் அமைச்சருடன் சரிக்கு சரி அமர முடியாது என சொல்லி, ஊடக சந்திப்பில் எம்மை கலந்து கொள்ள அனுமதிக்கவில்லை. அமைச்சரின் ஊடக சந்திப்பு முடிவடைந்த பின்னர் மாவட்ட செயலக வளாகத்தில் பிறிதொரு இடத்தில் வைத்தே நாம் ஊடகங்களுக்கு எமது நிலைப்பாட்டை கூறினோ .
தம்மை சாதாரணமானவர்கள். ஜனாதிபதி கூட சாதாரணமானவர்களுடன் சாதாரணமாக உரையாடுவார் என கூறுபவர்கள் கடற்தொழில் அமைச்சருடன் சரிக்கு சமனாக இருந்து ஊடகங்களை சந்திக்க அனுமதிக்க மாட்டோம் என எமக்கு கூறியுள்ளார்கள்.
இவர்களின் செயற்பாடுகளை பார்க்கும் போது, எமக்கு சந்தேகங்கள் வருகின்றன என தெரிவித்தனர்.









No comments