யாழ்ப்பாணத்தை சேர்ந்த கடற்தொழிலாளர் ஒருவரை தமிழக கடற்தொழிலாளர்கள் கடுமையாக தாக்கி தமிழகத்திற்கு கடத்தி சென்ற நிலையில் தமிழக கடலோர காவல் படையினரால் குறித்த கடற்தொழிலாளி மீட்கப்பட்டு , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
யாழ்ப்பாணம் மயிலிட்டி மற்றும் வளலாய் பகுதியை சேர்ந்த மூன்று கடற்தொழிலாளர்கள் பலாலி வடக்கில் இருந்து சுமார் 15 கடல் மைல் தூரத்தில் கடற்தொழில் ஈடுபட்டிருந்த வேளை அப்பகுதிக்கு வந்த தமிழக கடற்தொழிலாளர்கள் அவர்களுடன் முரண்பட்டு , தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அதில் இருவர் படகுடன் தப்பி மீண்டு வந்த நிலையில் , ஒருவரை தமிழக கடற்தொழிலாளர்கள் பிடித்த தமது படகில் ஏற்றி மூர்க்கத்தனமாக தாக்குதல் நடாத்தி அவரை தமிழகம் நாகப்பட்டினம் பகுதிக்கு கடத்தி சென்றுள்ளனர்.
அங்கு கீழையூர் பொலிஸார் யாழ்ப்பாண கடற்தொழிலாளரை மீட்ட நிலையில் , தாக்குதலுக்கு இலக்காகி, முகம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்கள் காணப்பட்டமையால் , நாகப்பட்டினம் அரச மருத்துவக்கல்லூரியில் அனுமதித்துள்ளனர்.
அதேவேளை , ஆற்காட்டுத்துறைக்கு தென்கிழக்கு பகுதியாக 09 கடல்மைல் தூரத்தில் தாம் கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த வேளை பைவர் படகில் வந்த மூவர் தமது வலைகளை அறுத்து , அட்டகாசம் புரிந்ததாகவும் , அவர்களை தாம் மடக்கி பிடிக்க முற்பட்ட வேளை , இருவர் படகுடன் தப்பி சென்ற நிலையில் , படகில் வந்த ஒருவரை தாம் மடக்கி பிடித்து தமது படகில் ஏற்றி நாகப்பட்டினத்திற்கு கொண்டு வந்ததாகவும் தமிழக கடற்தொழிலாளர்கள் கூறியுள்ளனர்.









No comments