“பாட்டாளி வர்க்கத்தின் வியர்வை, தியாகம், மற்றும் உழைப்பால் கட்டியெழுப்பப்பட்ட இந்த உலகில், தொழிலாளர்களின் நலன் குறித்து வெறும் வார்த்தைகளில் மட்டுமே பேசிக்கொண்டிருக்கவில்லை. அதை செயல்முறையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிரூபித்து வருகின்றது என மே தின வாழ்த்துச் செய்தியில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று குழு உறுப்பினரும், கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
மே தின தினத்தை முன்னிட்டு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தொழிலாளர் நலனை உறுதிப்படுத்த பல்வேறு சட்டங்கள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அவை வெறும் அரசியல் வாக்குறுதிகளாக அல்லாமல் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, இலங்கையின் பொருளாதார முதுகெலும்பாக விளங்கும் மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வரலாற்றுச் சிறப்பு மிக்க சம்பள உயர்வு, நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்ட ஒரு சமூகத்திற்கு நீதி வழங்குவதற்கான ஆரம்பக்கட்ட படிமுறையாகும்.
தலைமுறைகள் கடந்தும் உழைத்த அந்த மக்களின் குரல் இறுதியில் கேட்கப்பட்டு, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் முயற்சிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்பது இந்த அரசின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாகும்.
அதேபோல், நாட்டின் அந்நியச் செலாவணியின் முதுகெலும்பாக விளங்கும் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அவர்களின் குடும்பங்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
கடற்றொழிலில் ஈடுபடும் மக்களின் வாழ்க்கையும் மறக்கப்படவில்லை. கடலில் போராடும் அந்த உழைப்பாளிகளின் வாழ்வாதாரம், தொழில் பாதுகாப்பு மற்றும் சமூக நலன்களை மேம்படுத்தும் பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டின் மே தினம், வெறும் நினைவுநாளாக அல்லாமல், ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் ஒலிக்கும் போராட்ட மேடையாக அமையவுள்ளது.
தேசிய மக்கள் சக்தியால் நாடு முழுவதும் 21 இடங்களில் மே தினக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணம் மற்றும் வன்னி நிலப்பரப்பில் நடைபெறவுள்ள கூட்டங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை.
கடந்த காலங்களில் தொழிலாளர்கள் தமது உரிமைகளுக்காக போராடியபோது, அவர்களை துப்பாக்கிச் சூடு, தடியடி, கண்ணீர்ப்புகைக் குண்டுகள் மூலம் ஒடுக்கியவர்கள் இன்று தொழிலாளர் நலன் குறித்து பேசுவது மிகப் பெரிய பரிகாசமாகும்.
அன்று தொழிலாளர்களின் குரலை அடக்கத் தோட்டாக்களைப் பயன்படுத்தியவர்கள், இன்று தம்மை மீட்பர்களாக காண்பிக்க முற்படுகின்றனர். இத்தகைய போலி வேடங்களுக்கு மக்கள் இடமளிக்கக் கூடாது.
அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி, உண்மையான தொழிலாளர் விடுதலையை நோக்கி அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
உழைக்கும் மக்களின் கரங்கள் ஓங்கட்டும்! வியர்வையின் மதிப்பு உயரட்டும்! அனைத்துப் பாட்டாளி வர்க்கத்தினருக்கும் எனது செம் மேதின வாழ்த்துக்கள்! என தெரிவித்துள்ளார்.









No comments