Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தலைமுறைகள் கடந்த 36 வருட எதிர்ப்பார்ப்பு - நிறைவேற்றுமா இந்த அரசாங்கம் ?



- மயூரப்பிரியன் - 


"மக்களின் காணிகள் மக்களுக்கே .. " என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி மிக உறுதியாக உள்ளார். மக்களின் காணிகளை மக்களிடமே மீள கையளித்து விட வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் ஜனாதிபதி தொடர்ந்து காணப்படும் நிலையில் , அது தொடர்பில் நேரடியாக சென்று கள ஆய்வுகளை மேற்கொண்டு , அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு பணித்துள்ளார். 

அதன் அடிப்படையில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தலைமையில் , இலங்கை இராணுவத் தளபதிகள் உள்ளிட்ட விசேட குழுவினர்கள் கடந்த திங்கட்கிழமை மன்னாருக்கு விஜயம் செய்து தனியார் மற்றும் அரச காணிகளில் காணப்படும் பாதுகாப்பு தரப்பினரின் முகாம்களுக்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டு விடுவிக்க கூடிய காணிகள் தொடர்பில் கலந்துரையாடினர். 

தொடர்ந்து மறுநாள் செவ்வாய்க்கிழமை, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பாதுகாப்பு தரப்பினரின் முகாம்களுக்கு சென்று , காணி விடுவிப்பு தொடர்பில் ஆராய்ந்தனர். 

அதில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வலி. வடக்கு பிரதேசத்தில் மாத்திரம் சுமார் 2000 ஏக்கருக்கு அதிகமான காணிகளை பாதுகாப்பு தரப்பினர் தம் வசம் கடந்த 36 வருடங்களுக்கு மேலாக கையகப்படுத்தி வைத்துள்ளனர். அவற்றினை மீள மக்களிடம் கையளித்து தொடர்பில் கள ஆய்வுகளை மேற்கொண்டனர். 

குறித்த கள ஆய்வில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகரவுடன் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் , நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ, யாழ் . மாவட்ட செயலர் ம. பிரதீபன் யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ஜே.என்.எம்.பி.கே. நவரத்ன ஆகியோர் பங்கேற்று இருந்தனர். 

அதனை தொடர்ந்து காணி விடுவிப்பு தொடர்பில் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் உயர் மட்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.

புறக்கணிக்கப்பட்ட எம்.பி கள்.

காணி விடுவிப்புக்கள் தொடர்பில் வடக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். அவ்வாறான நிலையில் , வடக்கு காணி விடுவிப்பு தொடர்பில் , ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற உயர் மட்ட கலந்துரையாடலில் , வன்னி தேர்தல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி , கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்கவும் , யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி , கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் ஆகியோரே கலந்து கொண்டனர். 

இவர்களுடன் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் , கடற்தொழில் அமைச்சரின் ஒருங்கிணைப்பாளர், சு, கபிலன் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களும் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர் 

ஆனாலும் , வடக்கில் காணி விடுவிப்புக்கள் தொடர்பில் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வரும் தமிழ் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை இந்த கலந்துரையாடலுக்கு அழைக்கவில்லை என்ற வலுவான குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. 

அவர்களை அழைக்காது , ஆளும் கட்சியை பிரதிநிதித்துவபடுத்துபவர்களே பாதுகாப்பு தரப்புடன் காணி விடுவிப்பு தொடர்பில் மூடிய அறைக்குள் பேசியுள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளன. 

தரவுகள் இன்றி தடுமாற்றம் 

வலி. வடக்கில் காணி விடுவிக்க வேண்டிய காணிகள் தொடர்பிலான துல்லியமான தரவுகள் இன்றியும் , அமைவிடங்கள் பற்றிய போதிய விளக்கமும் இல்லாத நிலையில் பாதுகாப்பு தரப்பிடம் இருந்து காணிகளை விடுவிக்க அழுத்தமாக கோரிக்கையை முன் வைக்க முடியாது அதிகாரிகள் தடுமாறியதாக தெரிவிக்கப்படுகிறது. 

அதில் குறிப்பாக , மயிலிட்டி காணிக்கை மாதா தேவாலயம் , வரசித்தி விநாயகர் ஆலயம் உள்ளிட்ட வழிபாட்டு இடங்களை விடுவிக்க வேண்டும் என கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு வருகிறது,

 பாடசாலைகளை விடுவிக்க வேண்டும் , குறிப்பாக மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலயம் விடுக்கப்பட்டுள்ள போதிலும் , பாடசாலையின் ஒரு பகுதி இன்னமும் இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகிறது. அதனை விடுவிக்குமாறும் நீண்ட காலமாக பெற்றோர் , பழைய மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அதேவேளை , உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள இரண்டு இந்து மயானங்களை விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

அத்துடன் , மயிலிட்டி பகுதியில் இராணுவ உயர் அதிகாரிகளின் சொகுசு தங்குமிடமான "கொமோண்டா பங்களா" அமைந்துள்ள காணிகளை விடுவிக்குமாறும்  , குறித்த பங்காளவினால் , அப்பகுதிகளில் கடற்தொழில் செய்ய இராணுவத்தினர் தடை விதித்துள்ளதால் தமது வாழ்வாதாரமும் அழிக்கப்படுவதால் , அப்பகுதியை விடுவித்து காணிகளை கையளிக்க வேண்டும் என்பதுடன் , சுதந்திரமாக தொழில் செய்யவும் அனுமதிக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இவ்வாறான விடயங்களை சுட்டிக்காட்டி , காணி விடுப்பின் அவசியங்கள் தொடர்பில் பாதுகாப்பு தரப்பிடம் அழுத்தமான கோரிக்கைகளை முன் வைக்க அதிகாரிகள் தவறியுள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன 

பாதை விடுவிப்புக்கள் தொடர்பில் 

பருத்தித்துறை - கீரிமலை வீதியில் , கீரிமலையில் இருந்து காங்கேசன்துறை துறைமுக பகுதி வரையிலான சுமார் 3 கிலோ மீற்றர் தூரமான வீதி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் காணப்படுகிறது. 

குறித்த வீதி மூடப்பட்டுள்ளமையால் , வடமராட்சி , மயிலிட்டி , காங்கேசன்துறை பகுதிகளை சேர்ந்தவர்கள் வரலாற்று சிறப்பு மிக்க கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயம் , கீரிமலை தீர்த்த கேணி ஆகியவற்றுக்கு செல்வதற்கு. மாவிட்டபுரம் சென்றே செல்ல வேண்டிய நிலைமை காணப்படுகிறது. குறித்த வீதியினை திறந்து விடுவதன் கூடாக இலகுவில் கீரிமலை செல்ல முடியும். 

அதேபோன்று வல்லை - அராலி வீதியில் வசாவிளான் பகுதியில் இருந்து, தெல்லிப்பழை வரையிலான சுமார் 2 கிலோ மீற்றர் தூரமான வீதி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் காணப்படுவதால் , வடமராட்சி பகுதியை சேர்ந்தவர்கள் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருவதற்கு பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். 

தமது சொந்த வாகனங்களில் வருவோர் 2 கிலோ மீற்றர் தூரமான வீதி மூடப்பட்டு உள்ளமையால் ,  சுமார் 10 கிலோ மீற்றர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலைமை காணப்படுகிறது. 

பொது போக்குவரத்தான பேருந்தில் பயணிப்போர் யாழ். நகர் பகுதிக்கு சென்று , மீண்டும் தெல்லிப்பழைக்கு பேருந்தில் செல்ல வேண்டும் அதனால் சுமார் 35 -40 கிலோ மீற்றர் தூரம் சுற்றி பயணிக்க வேண்டிய நிலைமை காணப்படுகிறது. 

இதனால் குறித்த வீதியின் ஊடான போக்குவரத்திற்கு அனுமதிக்க வேண்டும் என மக்கள் நீண்ட காலமாக கோரி வருகின்ற போதிலும் , அது தொடர்பிலும் அழுத்தமான கோரிக்கைகளை கலந்துரையாடலில் முன் வைக்க தவறியுள்ளனர் என குற்றம் சாட்டப்படுகிறது. 

இந்நிலையிலையே , பலாலி வீதியில் உயர் பாதுகாப்பு வலயத்தின் ஊடாக செல்லும் வீதியில் சுமார் 2.5 கிலோ மீற்றர் தூர வீதியினை கடந்த ஆண்டு முதல் நேர கட்டுப்பாட்டுடன் , இராணுவத்தினர் போக்குவரத்திற்கு அனுமதித்துள்ளனர். 

அதனை நீக்கி 24 மணி நேரம் பயணிக்க கூடியவாறு முழுமையாக வீதியினை திறந்து விட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் கலந்துரையாடலில் இராணுவ தரப்பினரிடம் கோரிக்கையை முன் வைத்தார். 

அதற்கு இராணுவத்தினர் சம்மதிக்காத நிலையில், அழுத்தமாக கோரிக்கை விடுத்ததை அடுத்து , பாதையை ஒரு மணி நேரம் மேலதிகமாக திறக்க இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்தனர்

இதுவரை காலமும் , காலை 06 மணி முதல் இரவு 7 மணி வரையில் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்ட வீதியை , தற்போது ஒரு மணி நேரம் நீடித்து , இரவு 08 மணி வரையில் போக்குவரத்து செய்ய இராணுவத்தினர் அனுமதித்துள்ளனர். 

பிரதி பாதுகாப்பு அமைச்சரின் உறுதி 

கலந்துரையாடலில் பெறப்பட்ட தகவல்கள் மற்றும் கள ஆய்வுகளின் முடிவுகள் அனைத்தும் கொழும்பில் உள்ள பாதுகாப்பு அமைச்சுக்குக் கொண்டுசெல்லப்பட்டு, ஜனாதிபதி தலைமையிலான தேசிய பாதுகாப்புச் சபையிலும், நாடாளுமன்றப் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவிலும் சமர்ப்பிக்கப்பட்டு விரிவாக ஆராயப்படும் என்றும் , அதனை தொடர்ந்து,  தேசிய பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படாத வகையில் காணிகளை விடுவிப்பதற்கான சாதகமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர உறுதியளித்து சென்றுள்ளார். 

36 வருடங்களாக தமது காணிகள் விடுவிக்கப்படும் என எதிர்ப்பார்ப்புடன் தலைமுறைகள் கடந்து காத்திருக்கும் தமக்கு  மிக விரைவில் நல்ல செய்திகள் கிடைக்கும் என எதிர்ப்பார்ப்புடன் காணி உரிமையாளர்கள் காத்திருக்கின்றனர்.


No comments