Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நெடுந்தீவில் கடற்படைக்கு ஒரு ஏக்கர் காணி - கடுமையாக எதிர்த்த கஜேந்திரகுமார் ; கூட்டத்தில் அமைதியின்மையை ஏற்படுத்திய என்.பி.பி


யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் கடற்படையினருக்கான ஒரு ஏக்கர் அரச காணியை வழங்குவதற்கு பிரதேச செயலர் நடவடிக்கை எடுத்தமைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தார். 

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. குறித்த கூட்டத்தில் நெடுந்தீவில் கடற்படையினருக்கு ஒரு ஏக்கர் காணியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டமை தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்ட போதே கஜேந்திரகுமார் கண்டனம் தெரிவித்தார். 

கடற்படைக்கு காணி வழங்குவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டதா ? என நெடுந்தீவு பிரதேச செயலரிடம் வினவிய போது, நெடுந்தீவில் உள்ள "குயின் டவர்" அருகில் உள்ள ஒரு ஏக்கர் காணி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் பிரதேச காணி பயன்பாட்டு குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டு , அதன் அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். 

அதற்கு , மக்கள் பிரதிநிதிகளை அழைக்காது , காணி பயன்பாட்டு குழு கூட்டங்களை நடாத்தி முப்படையினரின் தேவைக்கு எவ்வாறு காணிகளை வழங்க முடியும் ? காணி பயன்பாட்டு குழு கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகளை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும், தேவைப்படின் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கும் சமர்ப்பித்து முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். 

கடந்த வரவு செலவு திட்ட உரையின் போது, ஜனாதிபதி இராணுவத்தினரை ஒரு இலட்சத்திற்குள்ளும் , கடற்படையினரை 25ஆயிரத்திற்குள்ளும் மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கொள்கை பிரகடனம் செய்திருந்தார். ஆனால் , இங்கே இராணுவம் , கடற்படை தேவைக்கு என காணிகள் சுவீகரிக்கப்படுகின்றன 

யுத்தம் முடிவடைந்தது 17 வருடங்கள் கடந்த நிலையிலும் , புதுசு புதுசாக காணிகளை சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கிறீர்கள் "மக்களின் காணிகள் மக்களுக்கே .. " என ஜனாதிபதி கூறி வரும் நிலையிலும் , மக்கள் பிரதிநிதிகள் இல்லாத கூட்டங்களில் முப்படைகளுக்கு காணிகளை வழங்க இரகசியமாக நடவடிக்கை எடுக்கிறார்கள் என தெரிவித்தார். 

அதன் போது சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனும் பெயரில் கூட்டத்தில் கலந்து கொண்ட தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் , நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பென்னம்பலத்தை நோக்கி , கடந்த ஆட்சி காலத்தில் நீங்கள் என்ன செய்தீர்கள் ? இராணுவத்திடம் இருந்து காணிகளை பெற்று மக்களிடம் கொடுத்தீர்களா ? தற்போது ஏன் இந்த அரசாங்கத்திடம் கேள்வி கேட்கிறீர்கள் என முரண்பட்டு , கூட்டத்தில் குழப்பங்களை ஏற்படுத்தினர். 

நீண்ட நேரத்தின் பின்னரே கூட்டத்திற்க்கு தலைமை தாங்கிய கடற்தொழில் அமைச்சர் , கூட்டத்தில் தேவையற்ற கருத்துக்களை கூற வேண்டாம் என கூறி கூட்டத்தை அமைதி படுத்தினார் 

 

No comments