அமரர் பரமேஸ்வரி சண்முகசுந்தரம் அவர்களின் நினைவாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு ரூ. 45 மில்லியன் பெறுமதியான இரண்டு கண் லேசர் இயந்திரங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவு, கடந்த ஆண்டில் 11,722 கண்புரை அறுவைச் சிகிச்சைகள், 2,299 ஏனைய கண் அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், 62,478 நோயாளிகள் சிகிச்சை பெற்றனர்.
அந்நிலையில் வைத்தியசாலையில் இருந்த Argon மற்றும் YAG லேசர் இயந்திரங்கள் செயலிழந்ததால், பல நோயாளிகள் சிகிச்சைக்காக பிற வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்தத் தேவையை உணர்ந்து, அமெரிக்காவில் மயக்கமருந்து நிபுணராகப் பணியாற்றும் அமரர் பரமேஸ்வரி சண்முகசுந்தரம் அவர்களின் மகன் டாக்டர் தேவேந்திரன், தனது அன்னையின் நினைவாக IMHO–USA அமைப்பின் ஊடாக ரூ. 45 மில்லியன் பெறுமதியான இரண்டு நவீன Argon–YAG Laser இயந்திரங்களை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு அன்பளிப்பாக வழங்கினார்.
இந்த இயந்திரங்கள் நீரிழிவு விழித்திரை நோய்கள், கிளாக்கோமா, விழித்திரை கிழிவுகள் மற்றும் கண்புரை அறுவைச் சிகிச்சைக்குப் பிந்தைய சிக்கல்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுவதுடன், பார்வை இழப்பைத் தடுக்கவும் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சை வழங்கவும் பெரிதும் உதவும் என வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த, சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் IMHO–USA அமைப்பின் சார்பில் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன், லேசர் இயந்திரங்களை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை நிர்வாகத்திடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
















No comments