Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கீரிமலையில் கொட்டப்பட்ட கழிவுகள் மீள அள்ளப்பட வேண்டும் - தவிசாளருக்கு காலக்கெடு விதித்துள்ள உறுப்பினர்கள்


கீரிமலை பகுதியில் 300க்கும் மேற்பட்ட டிப்பர் லோர்ட் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதாகவும் , அதனை ஆடி அமாவாசை தினத்திற்கு முன்னர் மீள அள்ளி வலி. வடக்கு பிரதேசத்திற்கு வெளியே கொண்டு செல்ல வேண்டும் என வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர். 

மாவிட்டபுரம் - கீரிமலை வீதியில் சுண்ணக்கல் அகழ்ந்தமையால் ஏற்பட்டுள்ள பாரிய குழிகளில் டிப்பர் வாகனங்களில் கழிவுகள் எடுத்து வரப்பட்டு கொட்டப்பட்டு வருகிறது. 

இது தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து, கொட்டப்பட்ட கழிவுகளை அங்கிருந்து மீள அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி வந்த நிலையில் , நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இனம் தெரியாத நபர்கள் குப்பைகளுக்கு தீ வைத்துள்ளனர். 

அது கடந்த இரண்டு நாட்களாக எரிந்து வந்தமையால் , அதனால் ஏற்பட்ட புகை மண்டலத்தால் , அயலவர்கள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர். 

இந்நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை வலி. வடக்கு பிரதேச சபையின் பெரும்பாலான உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர். 

கழிவுகளை நேரில் பார்வையிட்ட பின்னர் உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்கும் போது, 

வலி. வடக்கு பிரதேச சபையின் எல்லைக்குள் உள்ள பாரிய  குழிகளுக்குள் கழிவுகள் உக்கி , மண் தன்மையில் காணப்படும் கழிவினை கொட்டுவதற்கு , வலி. தெற்கு பிரதேச சபை அனுமதி கோரியுள்ளதாகவும் , அதற்கு ஒரு டிப்பர் கழிவு மண்ணுக்கு 2500 ரூபாய் அறவிட தீர்மானித்து உள்ளதாகவும் , தவிசாளரால் எமக்கு அறிய தரப்பட்டது. 

அப்போதே நாம் குறித்த கழிவுகள் உக்கிய மண்ணினை  ஏற்றும் இடத்திலும் , அதனை பறிக்கும் இடத்திலும் கண்காணிக்க வேண்டும் எனவும் கண்காணிப்பின் அடிப்படையிலையே அவற்றை கொட்ட அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தோம். தவிசாளரும் அதனை ஏற்றுக்கொண்டார். 

இந்நிலையில் கடந்த முதலாம் திகதி டிப்பர் வாகனங்களில் உக்காத கழிவுகளையும் இலத்திரனியல் கழிவுகள் , இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதாக உறுப்பினர்களுக்கு ஊரவர்கள் அறிவித்தனர். 

அதன் அடிப்படையில் நேரில் வந்து பார்த்த வேளை டிப்பர் வாகனங்களில் கழிவுகள் கொண்டு வரப்பட்டு , எவ்வித கண்காணிப்புக்களும் இன்றி கண்ட இடங்களிலும் கொட்டி சென்றதனை அவதானித்து , தவிசாளருக்கு அறிவித்தோம். உடனடியாக தான் அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். 

மீண்டும் 10ஆம் திகதி வந்து பார்த்த போது பெருமளவான குப்பைகள் தேங்கி காணப்பட்டன. அது தொடர்பில் தவிசாளருக்கு தெரிவித்த போது , தான் குப்பைகளை கொட்ட அனுமதி கொடுக்கவில்லை. தனது அனுமதியின்றி குப்பைகள் கொட்டப்பட்டதாக கூறி நடவடிக்கை எடுப்பதாக கூறினார். 

அந்நிலையில் 16ஆம் திகதி சபையின் மாதாந்த கூட்டம் நடைபெற்றது. அதன் போது கட்சி பேதமின்றி கழிவு கொட்டுவதற்கு எதிராக கடுமையான எதிர்ப்பை வெளியிட்டோம். 

வலி. தெற்கு பிரதேச சபை கழிவுகளை கொண்டு வந்து கொட்ட கூடாது என்றும் , அனுமதியின்றி கொட்டப்பட்ட கழிவுகளை மீள அள்ளி , வலி வடக்கு பிரதேசத்திற்கு வெளியே கொண்டு செல்ல வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினோம். 

நாங்கள் சபையில் தீர்மானம் நிறைவேற்றிய பின்னரும் கழிவுகள் கொட்டப்படுவதாக எமக்கு தகவல் கிடைத்தன் அடிப்படையில் 27ஆம் திகதி இப்பகுதிக்கு நாம் வந்த போது டிப்பர் வாகனங்களில் கழிவுகள் கொண்டு வரப்பட்டு இருந்தது. 

அதனை குழிகளுக்குள் கொட்ட விடாது தடுத்து நிறுத்தி இருந்தோம். எது தொடர்பில் வலி. வடக்கு பிரதேச சபையின் தவிசாளருக்கு அறிவித்தோம். அவர் நேரில் வந்து தன் அனுமதிகளை மீறி கழிவுகளை கொட்ட முடியாது என கூறி , நுழைவாயில்களை சங்கிலி பூட்டு போட்டு பூட்டியதுடன் , டிப்பர் வாகனங்களையும் திருப்பி அனுப்பி இருந்தார். 

அந்நிலையில் மறுநாள் 28ஆம் திகதி இனம் தெரியாத நபர்கள் நுழைவாயில் பூட்டுக்களை உடைத்து , நாம் மீள அள்ள கோரிய குப்பைகளுக்கு தீ வைத்துள்ளனர். அந்த தீ இரண்டு நாட்களாக தொடர்ந்து எரிந்து வந்தமையால் , அதனால் ஏற்பட்ட புகை மண்டலத்தால் , அயலவர்கள் கடுமையான பாதிப்புக்களை எதிர்கொண்டு வந்தனர். 

அதானல் எமது தவிசாளரின் அனுமதியின்றி , அடாத்தாக எமது பிரதேச சபை ஆளுகைக்குள் குப்பைகளை கொண்டு வந்து கொட்டிய வலி.தெற்கு பிரதேச சபையினருக்கு எதிராக எமது தவிசாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அத்துடன் , நுழைவாயில் பூட்டுக்களை உடைத்து , அடாத்தாக உட்புகுந்து குப்பைகளுக்கு தீ வைத்தவர்களை கண்டறியுமாறு பொலிஸ் நிலையத்தில் தவிசாளர் முறைப்பாடு செய்ய வேண்டும். 

அவ்வாறான நடவடிக்கைகளை தவிசாளர் எடுக்காவிடின் , தவிசாளருக்கு எதிராக நாம் நடவடிக்கை எடுப்போம். வடமாகாண ஆளுநர் , உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோரிடமும் சம்பவம் தொடர்பில் முறைப்பாடுகளை கையளிக்கவுள்ளோம். 

இந்த பகுதி ஒரு புண்ணிய பூமியாகும்.குப்பைகள் கொட்டப்பட்டுள்ள இந்த பகுதிக்கு அருகில் தான் வரலாற்று சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் உள்ளது. தற்போது மகோற்சவ திருவிழாக்கள் நடைபெறவுள்ளன. 

எதிர்வரும் 11ஆம் திகதி தேர் திருவிழாவும் , மறுநாள் 12ஆம் திகதி தீர்த்த திருவிழாவும் நடைபெறவுள்ளது. மாவிட்டபுர கந்தன் தீர்த்தமாட இந்த குப்பைகள் கொட்டப்பட்டுள்ள குழிகளில் இருந்து சுமார் 50 மீட்டர் தூரத்தால் செல்லும் வீதியால் கீரிமலை நோக்கி செல்வார். 

அது மாத்திரமின்றி ஆடி அமாவாசை தினத்தில் கீரிமலையில் பிதிர்கடன்களை நிறைவேற்ற இலட்சக்கணக்கான இந்துக்கள் கூடவுள்ளனர். அதற்காக நாட்டின் பல பகுதிகளில் இருந்து இந்துக்கள் கீரிமலை பகுதிக்கு வருகை தருவார்கள். 

தற்போது டெங்கு அபாயம் நாட்டின் பல பகுதிகளிலும் காணப்படும் நிலையில் , இந்த குழிகளுக்கு பிளாஸ்டிக் போத்தல்கள் பலவும் , நீர் தேங்கி நிற்க கூடிய கழிவுகளும் காணப்படுத்தல் , மழை வருமாயின் இந்த குப்பைகளுக்குள் இருந்து டெங்கு பரவும் அபாயம் காணப்படுகிறது. 

ஆடி அமாவாசையை முன்னிட்டு , சுற்றுலா பயணிகள் , புலம்பெயர் நாட்டவர்கள் , நாட்டின் ஏனைய பாகங்களை சேர்ந்த இந்துக்கள் என பலரும் கீரிமலைக்கு வரவுள்ளமையால் கொட்டப்பட்ட குப்பைகள் அதற்கு முன்னர் அள்ளப்பட வேண்டும். 

இந்த குழிகளுக்குள் , மருத்துவ கழிவுகள் , இலத்திரனியல் கழிவுகள் , பெருந்தொகையான பிளாஸ்ரிக் , இறைச்சி கழிவுகள் என பல்வேறு வகையான கழிவுகள் காணப்படுகின்றன. 

அதானல் துர்நாற்றம் வீசுவதுடன் , நிலத்தடி நீர் மாசு , சுற்றுசூழல் மாசு , என்பவற்றால் ,அயலில் வசிக்கும் குழந்தைகள், சிறுவர்கள் , முதியவர்கள் , சுவாச நோய் உடையவர்கள் , நோயாளிகள் , எனவும் பலரும் பாதிக்கப்படுகின்றனர். 

எனவே இது தொடர்பில் உடனடியாக எமது தவிசாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொட்டப்பட்ட குப்பைகள் அனைத்தும் மீள அள்ளப்பட்டு , இப்பகுதியில் இருந்து அகற்றப்பட வேண்டும். அவை வலி. வடக்கின் எந்த பகுதியிலும் கொட்ட அனுமதிக்க கூடாது. 

இவை எவையும் நடைபெறாது விடின் , கட்சி பேதமின்றி , ஊரவர்கள் , செயற்பாட்டாளர்கள் , சூழலியலாளர்கள்  ,  பொதுமக்கள் , பொது அமைப்புக்கள் என பல்வேறு தரப்பினர்களையும் ஒன்று திரட்டி பாரிய போராட்டங்களை முன்னெடுப்போம் என வலி. வடக்கு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். 

ஓர் இடத்தில் சுற்றுச்சூழலை பேணிக்காப்பதற்காக , மற்றுமொரு இடத்தின் சூழலை நாசமாக்கப்படுவதனை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் கீரிமலை குப்பை மேட்டு பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காணப்படவேண்டும்









No comments