Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

சமரமற்ற ஊடகப்போராளி சபேசன்!


யாழ். ஊடக அமையத்தின் முன்னாள் தலைவரும், யாழ்.தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியருமான மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரன் கனடாவில் காலமானார் என்ற செய்தி ஆழ்ந்த கவலையுடன் யாழ்.ஊடக அமையம் பகிர்ந்து கொள்கின்றது.

தமிழ் ஊடகத்துறையில் நீண்டகாலம் பணியாற்றியவர், ஊடகவியலாளர்களின் குரலாகவும், அவர்களின் உரிமைப் போராட்டங்களில் முன்னின்று உழைத்த ஒரு சிறந்த ஆளுமையுமாவார். 

தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்ட ஊடகப்படுகொலைகளிற்கான நீதி கோரிய அனைத்து போராட்டங்களிலும் சபேசனின் பங்கிருந்தது.

யாழ்ப்பாணத்திலாயினும் மட்டக்களப்பிலாயினும் சளைக்காது போராட்ட களங்களில் முன்னிற்பவராக சபேசன் இருந்திருந்தார்.

குறிப்பாக யாழ்.ஊடக அமையத்தின் ஊடக சுதந்திரத்திற்கான பயணத்திலும் சர்வதேச நாடுகளது தூதுவர்கள் மற்றும் ராஜதந்திரிகளுடனான சந்திப்புக்களில் சபேசனின் வகிபாகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.வெளித்தெரியாத அத்தகைய சந்திப்புக்களில் சமரசமின்றி புள்ளி விபரங்கள் சகிதம் ஊடக அமையத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்திவிடுவது சபேசனின் கைங்கரியங்களுள் ஒன்றாகும்.

யாழ்.ஊடக அமையம் கொழும்பு ஆட்சியாளர்களதும் அவர்களது எடுபிடிகளதும் அழுத்தங்களையும் நெருக்கடிகளை சந்தித்த வேளைகளில் எல்லாம் ஒற்றுமையாக சக ஊடகவியலாளர்களுடன் நின்று அடிபணியாது போராடவும் அவர் தவறவில்லை.

ஊடகவியலாளர்களின் உரிமைகளுக்காக தனது உயிரை கூட பொருட்படுத்தாது துணிவுடன் குரல் கொடுத்து அர்ப்பணிப்புடன் களத்தில் போராடுமொரு தலைவராகவும் திகழ்ந்தார்.

அவரது அர்ப்பணிப்புள்ள பணிகள் தமிழ் ஊடக வரலாற்றில் என்றும் அழியாத தடம் பதித்தவை.

போர் சூழலின் போதான அறிக்கையிடலின் போதும் சரி அரசு-புலிகள் சமாதான பேச்சுக்கால அறிக்கையிடல்களின் போதும் சரி சபேசனின் பங்கு வார்த்தைகளுள் அடங்காததொன்று.

கொழும்பு ஆட்சியாளர்களதும் அவர்களது எடுபிடிகளதும் அழுத்தங்களின் போது தனது ஊடகப்பணியை கைவிட மறுத்து தற்காலிகமாக தமிழகத்திற்கு பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டு உயிர் பாதுகாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுள் சபேசனுமொருவராவார்.

அதேவேளைதமிழ் ஊடகத் துறையில் நீண்டகாலம் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அவர், திறமையான பத்திரிகையாளராக மட்டுமன்றி, பல தலைமுறை ஊடகவியலாளர்களை உருவாக்கிய சிறந்த விரிவுரையாளராகவும் விளங்கியவர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் ஆசிரியராகப் பணியாற்றி, ஊடகக் கல்வி மற்றும் தொழில்முறை ஊடகவியல் வளர்ச்சிக்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கியவர். 

அவரது அர்ப்பணிப்பான சேவையும், எளிமையும், மனிதநேயமும் தமிழ் ஊடக வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.

நோயுற்றிருந்த போதும் அவரிற்கான உதவிகளை வழங்க கனடா ஊடக நண்பர்கள் இறுதிக்கணம் வரை அவரிற்கு தோள் கொடுத்தே வந்திருந்தனர்.

சுமரசமற்ற ஊடகப்போராளி சபேசனை அன்னாரை இழந்து துயருறும் அவரது மனைவி மற்றும் அன்புக்குழந்தைகள் ,குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், மாணவர்கள் மற்றும் ஊடகத்துறைச் சார்ந்தோர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்

No comments