மாணவர்களின் திறமைகளை முழுமையாக வெளிக்கொணரும், அவர்களின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் கல்விச் சீர்திருத்தங்களையும் தரமான கல்வி வசதிகளையும் உருவாக்குவதில் எமது அரசாங்கம் உறுதியுடன் செயற்பட்டு வருகிறது என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில், மாகாணத்திற்கான குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடையின் ஊடாக 2026ஆம் ஆண்டிற்கான வட மாகாண கல்வி அமைச்சின் வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய வகுப்பறைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
80 ஆண்டுகளுக்கும் மேலாக அறிவொளியைப் பரப்பி, வட மாகாணத்தின் கல்வி வளர்ச்சியில் தனித்துவமான பங்களிப்பை வழங்கி வரும் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் வளர்ச்சிப் பயணத்தில் பங்கெடுத்தது எனக்கு மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது.
ஒரு நாட்டின் உண்மையான செல்வம் அதன் மனித வளமே. அந்த மனித வளத்தை உருவாக்கும் வலிமையான அடித்தளம் கல்வியாகும். அதனால்தான் எமது அரசாங்கம் கல்வித் துறைக்கு உயர்ந்த முன்னுரிமை வழங்கி, மாணவர்களுக்கு தரமான கற்றல் சூழலை உருவாக்கும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
அதேவேளை, போதைப்பொருள் உள்ளிட்ட சமூகச் சீர்கேடுகள் இன்றைய இளம் தலைமுறையை இலக்காகக் கொண்டு பரவி வரும் நிலையில், பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் கல்வி, ஒழுக்கம் மற்றும் நாளாந்த செயற்பாடுகள் குறித்து கூடுதல் அக்கறையுடனும் விழிப்புடனும் இருக்க வேண்டியது மிகவும் அவசியமானது
மாணவர்களின் திறமைகளை முழுமையாக வெளிக்கொணரும், அவர்களின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் கல்விச் சீர்திருத்தங்களையும் தரமான கல்வி வசதிகளையும் உருவாக்குவதில் எமது அரசாங்கம் உறுதியுடன் செயற்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், வடக்கு மாகாண பிரதம செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர், கல்வித் திணைக்கள அதிகாரிகள், கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், என பலரும் கலந்துக் கொண்டனர்
















No comments