நாட்டில் உள்ள அழகான கடற்கரைகளில் ஒன்றாக கசூரினா கடற்கரையும் காணப்படுகிறது இதன் அபிவிருத்தி பணிகளை ஒரு மாத காலத்திற்குள் தொடங்கி இவ்வருட இறுதிக்குள் முடிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக சுற்றுலா துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்
யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள சுற்றுலா துறை பிரதி அமைச்சர் நேற்றைய தினம் திங்கட்கிழமை கசூரினா கடற்கரை பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு கடற்கரையை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
கசூரினா கடற்கரையை அழகுபடுத்தி , அபிவிருத்திகளை முன்னெடுக்க இந்த ஆண்டு 40 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகத்தின் நிதியுதவியின் கீழ், இந்த ஆண்டிற்குள் இந்தப் பகுதியை ஒரு கடற்கரைப் பூங்காவாகவும் (Beach park), சிறுவர் பூங்காவாகவும், படகுச் சேவைகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.நாட்டின் மிக அழகான கடற்கரைகளில் ஒன்றான கசூரினா கடற்கரைக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தருகின்றனர். எனவே, இந்தப்பகுதியின் அடிப்படை உள்கட்டமைப்பு, சுற்றுலா வசதிகள் மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளை மேம்படுத்துவதே எங்கள் நோக்கமாகும். குறிப்பாக படகுச் சேவை, படகுத் துறைமுகம் , பாதுகாப்பு வசதிகள் ஆகியவை இந்தத் திட்டத்தின் கீழ் வருகின்றன.வடமாகாண சுற்றுலா வளர்ச்சிப் பணியகமும் பிரதேச செயலகமும் இணைந்து இத்திட்டத்தை ஒருங்கிணைக்கின்றன.எனவே இன்னும் ஒரு மாதத்திற்குள் இதற்கான பணிகளைத் தொடங்கி, இந்த ஆண்டிற்குள்ளேயே இந்த திட்டத்தை நிறைவு செய்யத் திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்தார்.









No comments