யாழ்ப்பாண சர்வதேச விளையாட்டு மைதானத்தின் நிறுத்தப்பட்ட பணிகள் மிக விரைவில் மீள ஆரம்பிக்கப்படும் என விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் தையிட்டி ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் கரப்பந்தாட்ட மைதான நவீனமயமாக்கல் பணிகளுக்கான அடிக்கல் நட்டு விழாவில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
எமது அரசாங்கம் கடந்த ஒன்றரை வருட காலங்களில் யாழ்ப்பாணத்தில் விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதற்காக பல திட்டங்களை தொடங்கியுள்ளது
அந்த வகையில், யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானப் பணிகள் தொடங்கப்பட்டன. இருப்பினும், இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் பிரச்சினைகள் காரணமாக இத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இன்னும் 1-2 மாதங்களில் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டு பணிகள் மீண்டும் தொடங்கும்.
அதுபோன்று யாழ்ப்பாண நகரப் பகுதியில் உள்ளரங்க விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இத்திட்டம் செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், அரசியல் நோக்கங்களுக்காகச் சிலர் நீதிமன்றில் தொடர்ந்த வழக்கினால் உள்ளரங்க விளையாட்டு அரங்கத்தின் பணிகள் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளன. அந்த வழக்கு முடிவடைந்ததும் , பணிகள் மீண்டும் தொடர நடவடிக்கை எடுக்கப்படும்.
இளைஞர்கள் போதைப்பொருள் போன்ற தீய பழக்கங்களில் ஈடுபடாமல் விளையாட்டு மற்றும் நல்வழியில் அவர்களை வழிநடத்துவதே எமது அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும்.
இனம் - மதம், வடக்கு - தெற்கு போன்ற எந்த பாகுபாடும் இன்றி அனைத்து மக்களையும் இலங்கையர்களாக ஒன்றிணைத்து அமைதியான வாழ்வை அமைப்பதே எமது அரசாங்கத்தின் இலக்காகும் என தெரிவித்தார்









No comments