நெடுந்தீவுக்கான படகு சேவைகளில் குறைபாடுகள் காணப்படுவதாகவும் அதனை சீராக்க வேண்டும் என கோரி உள்ளூர் சுற்றுலா சேவை வழங்குநர்கள் உள்ளிட்ட தரப்பினர் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெடுந்தீவு - குறிகட்டுவான் இடையில் வீதி அதிகார சபைக்கு சொந்தமான படகு சேவையில் ஈடுபடுபவர்கள், பலரை ஏற்றாது விட்டு செல்வதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் , இன்றைய தினம் புதன்கிழமை காலை நெடுந்தீவில் சுற்றுலாவிகள் உள்ளிட்ட பலரை, நெடுந்தீவில் இருந்து அழைத்து வராது படகுகள் புறப்பட்டுள்ளது.
இதனால் பலர் யாழ்ப்பாணம் திரும்ப முடியாது நிர்க்கதியானர்கள்.
படகு சேவை வழங்குநர்களின் இத்தகைய செயற்பாடுகளினால் நெடுந்தீவுக்கான சுற்றுலாத்துறை பாதிப்பை எதிர்கொள்வதாகவும், படகு சேவையில் உள்ள குறைபாடுகளால், சுற்றுலாவிகள் நெடுந்தீவு வராதமையால் தமது சுற்றுலா சேவைகள் பெரும் பாதிப்புக்களை சந்திக்கின்றன.
குறிப்பாக தங்குமிட சேவைகளை பெற சுற்றுலாவிகள் முற்பதிவுகளை மேற்கொண்டு நெடுந்தீவு வருவதற்காக யாழ்ப்பாணத்தில், இருந்து குறிகட்டுவான் வரை வந்த பின்னர் , குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவுக்கான படகு சேவைகள் தடைப்பட்டால், அவர்கள் திரும்பி செல்கின்றனர்.
அதனால் முற்பதிவுகள் இரத்து செய்யப்பட்டு அவர்களின் முற்பணத்தையும் திருப்பி கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்படுவதனால் பெரும் வருமான இழப்பை எதிர்கொள்கின்றோம்.
எனவே நெடுந்தீவின் சுற்றுலாத்துறை மேம்படுத்த வேண்டும் என அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் அரசாங்கம் நெடுந்தீவுக்கான படகு சேவைகளை உரிய முறையில் மேம்படுத்தி தரவேண்டும் என கோரியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேவேளை அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து, மீண்டும் நெடுந்தீவு செல்வதற்காக சென்ற நெடுந்தீவை சேர்ந்தவர்கள் வீதி அதிகார சபையினரால் நடத்தப்படும் படகு சேவை கிடைக்காதமையால், தனியாருக்கு சொந்தமான சிறிய படகில் நெடுந்தீவு நோக்கி பயணித்த போது, படகு கவிழ்ந்ததில் 10 பேரும் கடலில் விழுந்த நிலையில் உயிராபத்து, இன்றி அவர்கள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.













No comments