Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் , போதைப்பொருள் கடத்தல்களை கட்டுப்படுத்துங்கள் - புதிதாக பதவியேற்ற வடக்கு கடற்படை தளபதியிடம் ஆளுநர் வலியுறுத்தல்


இந்திய மீனவர்களின் தொடர்ச்சியான அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி முறைகளால் வடக்கு மாகாண மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்த கடற்படையினரின் நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வட மாகாண கடற்படைத் தளபதியிடம் கோரியுள்ளார்

வட மாகாண கடற்படைத் தளபதியாக புதிதாக பொறுப்பேற்றுள்ள,  ரியர் அட்மிரல் எம்.டி.கே.விஜேவர்த்தன, நேற்றைய தினம் புதன்கிழமை ஆளுநர் செயலகத்தில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை மரியாதை நிமித்தம் சந்தித்து கலந்துரையாடியபோதே ஆளுநர் இந்த விடயங்களை வலியுறுத்தினார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஆளுநர், 

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள் வடக்கு மாகாண மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கும் கடல்வளப் பாதுகாப்புக்கும் தொடர்ச்சியான அச்சுறுத்தலாக காணப்படுகிறது.

 குறிப்பாக, சட்டவிரோத மீன்பிடி முறைகள் கடல் வளங்களை அழிப்பதுடன், உள்ளூர் மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடித் தொழிலையும் பாதித்து வருகின்றனர்.

மேலும், வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் மற்றும் மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது. 

இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்துடன் நெருங்கிய ஒருங்கிணைப்பில் செயற்பட்டு, சட்ட அமுலாக்க நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.

அத்துடன், கடல் வழியாக நாட்டிற்குள் உயிர்கொல்லி போதைப்பொருட்கள் கடத்தப்படும் முயற்சிகளை முறியடிப்பதற்கான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேலும் வலுப்படுத்த வேண்டும்.

 வடக்கு கடற்பரப்பின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு, சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக கடற்படை தொடர்ந்தும் உறுதியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என ஆளுநர் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த வட மாகாண கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் எம்.டி.கே.விஜேவர்த்தன,

 வடக்கு மாகாண மக்களின் பாதுகாப்பு, கடல் வளங்களின் பாதுகாப்பு மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் கடற்படை தொடர்ந்தும் முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்படும் எனத் தெரிவித்தார். 

இச்சந்திப்பில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன் அவர்களும் கலந்துகொண்டார்





No comments