‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவோம்’ (Rebuilding Sri Lanka) திட்டத்தின் கீழ் 90 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் ஊர்காவற்றுறை கண்ணகை அம்மன் இறங்குதுறைக்கு செல்லும் வீதியை அகலப்படுத்தி புனரமைக்கும் பணிகளை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நேரில் பார்வையிட்டார்.
இதன்போது, வீதி அகலப்படுத்தல் மற்றும் புனரமைப்புப் பணிகள் தற்போது எந்த நிலையில் இடம்பெற்று வருகின்றன என்பது தொடர்பிலும், பணிகளின் காரணமாக பொதுமக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் தொடர்பிலும் அமைச்சர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அத்துடன், புனரமைப்புப் பணிகளை உரிய தரத்திலும், திட்டமிட்ட காலத்திற்குள் நிறைவு செய்யும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனைகளையும் வழங்கினார்.
மேலும், எதிர்வரும் வருடம் கண்ணகை அம்மன் இறங்குதுறையை மேலும் விரிவுபடுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதற்கான திட்டங்கள் மற்றும் முன்னேற்பாடுகள் தொடர்பிலும் அமைச்சர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
கண்ணகை அம்மன் இறங்குதுறையை விரிவுபடுத்துவதற்காக ‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவோம்’ (Rebuilding Sri Lanka) திட்டத்தின் கீழ் 160 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.
எனினும், குறித்த அபிவிருத்தித் திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு சுமார் 250 மில்லியன் ரூபா தேவைப்படுவதால், மேலும் 90 மில்லியன் ரூபா நிதி தேவைப்படுவதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
இதனையடுத்து, தேவையான மேலதிக 90 மில்லியன் ரூபா நிதியைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதனைப் பெற்றுக்கொடுப்பதற்கான உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
ஊர்காவற்றுறை பிரதேசத்தின் போக்குவரத்து மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த வீதி மற்றும் இறங்குதுறை அபிவிருத்திப் பணிகள், அப்பகுதி மக்களின் நீண்டகால தேவைகளை கருத்திற்கொண்டு உரிய முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனும் உடனிருந்தார்.













No comments